சவூதி அரேபியாவில் பிறிதொரு அரேபியரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 30 ஆண்டுகளின் பின்
எதிர்வரும் சில நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என சவூதி அரேபிய
பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,
அப்துல்லாஹ் பின் பந்தி அல் சம்மாரி என்ற குறித்த நபர் 23 வயதாக இருந்த
போது வடமேற்கு நகரமான ஹைலில் இடம் பெற்ற தகராறு ஒன்றில் பெரிய தடி
ஒன்றினைக் கொண்டு தலையில் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இது
கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் நடை பெற்றிருந்தது. இந்நிலையில் குறித்த
சம்பவத்தை ஒரு கொலை என தீர்மானித்த நீதிமன்றம் இரத்தப்பணத்தை செலுத்துமாறு
உத்தரவிட்டு குறித்த நபரை விடுதலை செய்தது. எனினும் ஐந்து ஆண்டுகளின்
பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த நபரை சிறையில் இட்டதுடன்
கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்பையும் அளித்திருந்தது. அதன் பின் 3
ஆண்டுகள் கழித்து சம்மாரி விடுதலை செய்யப்பட்டிருந்ததுடன் குறித்த
காலப்பகுதியில் அவர் திருமண பந்த்தத்திலும் இணைந்திருந்தார். எனினும்
நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருப்தியடையாத பாதிக்கப்பட்ட தரப்பினர்
சம்மாரியை மீளவும் விசாரிக்குமாறு கோரினர். இந்நிலையில் இரத்தப்பனத்தை
ஏற்று சம்மாரியை மன்னிக்குமாறு குறித்த உறவுகளிடம் நீதிமன்றம்
கேட்டுக்கொண்ட போதும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதற்கு இணங்கவில்லை. கடந்த
30 ஆண்டுகளாக, கொல்லப்பட்டதாக்கூறப்படும் நபரின் உறவுகளிடம் மன்னிப்பு
வேண்டி பேச்சுக்கள் நடைபெற்றுள்ள போதும் அது பயனளிக்காது போயுள்ளது.
சம்மாரி விடயத்தில் மத்தியஸ்தம் முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள நிலையில்
தற்போது 50 வயதைத் தாண்டியுள்ள அவருக்கு இன்னும் சில நாட்களில் மரண தண்டனை
நிறைவேற்றப்படவுள்ளதாக அல் சவூதி நாளிதழ் செய்திவெளியிட்டுள்ளது. சிறையில்
இருந்த காலப்பகுதியில் சம்மாரி குர்ஆனை மனனம் செய்துள்ளதுடன் புகை
பிடித்தல் உள்ளிட்ட பல தீய பழக்கங்களிலிருந்தும் தன்னை
விடுவித்துக்கொண்டுள்ளார். அத்துடன் ஏனைய கைதிகளுக்கும் வழிக்காட்டும்
விதமாக நடந்து கொண்டதற்காக சிறைச்சாலை நிர்வாகம் அவரை சிறந்த சிறைத்தோழர்
என பெயரிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 5 பிப்ரவரி, 2013
0 கருத்துகள்: