இனவாத, மதவாத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் நம்பிக்கைகொள்ள முடியாது. அது நிராகரிக்கப்பட வேண்டியதொன்றாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கூறுகையில்;
கடந்த மாதம் 21 ஆம் திகதி இந்த சபையில் உரையாற்றிய பெளத்த சாசன மற்றும் மத விவகார பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன இந்த நாட்டில் இன ரீதியான, மத ரீதியான எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறவில்லை எனக் கூறினார்.

பிரதியமைச்சர் இவ்வாறு கூறிக்கொண்டிருந்த அதே சந்தர்ப்பத்தில் பிக்குகள் மற்றும் நால்வர் அடங்கிய குழு குளியாப்பிட்டியில் பன்றியொன்றின் படத்தின் குறுக்கே அல்லாஹ் என்று எழுதி ஏந்திச் சென்றது.

இப்படியொரு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அதனைத் தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

அண்மைக் காலமாக இடம் பெற்று வருகின்ற சம்பவங்களில் ஒன்று மட்டுமே இதுவாகும். இது வரையில் பள்ளிவாசல்கள் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இது மிகவும் பார தூரமான நிலைமையாகும். எனவே, இது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், தற்போதைய நிலைமைகளானது வதந்திகள் மூலம் மேலும் தூண்டிவிடப்படுகின்றது. மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கின்ற இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரச்சினைகள் குறைவதற்கு பதிலாக நாளுக்குநாள் அவை அதிகரித்துச் செல்கின்றன.

சிங்களவர்கள் செறிந்து வாழும் தென் பகுதிகளில் சிங்களவர்களை சிறுபான்மையாக்கி வருவதான கருத்துகளே இங்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. தென் பகுதிகளில் முஸ்லிம்களின் அதிகரிப்பானது எதிர்காலத்தில் சிங்களவர்களை சிறுபான்மையாக்கிக் கொண்டிருப்பதாக சம்பந்தப்பட்ட வரைபடமொன்றில் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போர்த்துக்கேயர்கள் இலங்கை வந்தபோது இங்கு முஸ்லிம்கள் எவரும் இருக்க வில்லை என்றும் இன்னுமொரு வரைப்படம் கூறுகின்றது. எவ்வாறிருப்பினும் போர்த்துக்கேயரை நாட்டுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று எட்டாவது தர்ம பராக்கிரமபாகுவை முஸ்லிம்களே எச்சரித்திருந்தனர்.

சுதந்திரத்தின் பின்னர் சிங்கள மக்களின் விகிதாசாரம் அதிகரித்து வந்துள்ளது. 1947 இல் 63 சதவீதமாக இருந்த சிங்கள மக்களின் வீதம் தற்போது 75 சதவீதமான நிலையில் காணப்படுகின்றது.

இங்கு பெருமளவிலான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறியமையினாலேயே சிறுபான்மையினரின் விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
இருந்த போதிலும் சிங்களவர்களே இந்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்றும் எப்போதும் சிங்களவர்களே பெரும்பான்மையினமாக இருப்பர் என்று டி.எஸ். சேனநாயக்க கூறியுள்ளார். அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இந்நாட்டில் உரிமை இருப்பதாகவும் அவர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் சேனநாயக்க வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சிங்கள மக்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே முதலில் இந்த சபையில் குரல் எழுப்பும்.

மேலும், ஹலால் சான்றிதழ் குறித்த பிரச்சினை ஒன்றும் இங்கு எழுந்திருக்கின்றது. கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய ஹலால் சான்றிதழ் என்பது முழுக்க முழுக்க தன்னார்வ விடயமாகும். வியாபார அமைப்புகள் மீது யாரும் ஹலால் சான்றிதழை பலவந்தமாக திணிப்பார்களானால் அது குறித்து முறைப்பாடுகள்வரின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எஸ்.எல்.ஐ.எஸ். இன் பொறுப்புக்குரிய இந்த சான்றிதழ் விடயத்தை தனியாருக்கு வழங்கியது ஏன் என்பதை அரசாங்கம் இங்கு அறிவிக்க வேண்டும். அனைத்து முஸ்லிம் தலைமைத்துவங்களும் இந்த விவகாரத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்த்துக் கொள்வதற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆகவே, இந்த பிரச்சினையை ஏன் மேலும் எரிய விட வேண்டும்?

இவ்விவாகாரம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துடனும் வியாபார சமூகத்துடனும் பேச்சுகளை நடத்துவதற்கு அரசாங்கம் ஏன் தவறியிருக்கின்றது எனக் கேட்க விரும்புகிறேன்.

சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பில் சந்தேகங்கள் குறித்து அது தொடர்பாக ஆராய சுயாதீன தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அத்துடன் குறைபாடுகளில் பிழைகள் இருப்பின் அது தொடர்பில் விசாரித்தறிந்து தண்டனை வழங்கப்படிருக்க வேண்டும். அதனை விடுத்து பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு அரசு முயலக்கூடாது.

நம்பிக்கையற்றவர்களை அழிப்பதற்கான இராணுவ மற்றும் பயங்கரவாதப் பிரசார நடவடிக்கையாக ஜிஹாத் எனும் சொல்லுக்கு தவறான அர்த்தப்படுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்விடயத்தில் பிரசித்தி பெற்ற எழுத்தாளரான ருடோல்ப் பீட்டர்ஸ் நவீன வரலாற்றில் ஜிஹாத் எனும் தனது நூலில் அந்த கருத்தாக்கத்தை தமது மதக் கடமைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான மத நம்பிக்கைகளின் உள ரீதியான போராட்டம் என்றே விபரித்துள்ளார்.

இதைத்தான் நபிகள் நாயகத்துக்கு முன்னதாகவே அகங்காரத்தில் இருந்து எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று புத்தபிரான் போதித்திருக்கிறார்.

இஸ்லாமிய மதத்தை நிந்திக்கும் பல இணையத் தளங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தை நிந்திக்கும் இணையத்தளங்கள் தடை செய்யப்படுகின்ற நிலையில், இத்தகைய இணையத்தளங்கள் ஏன் தடை செய்யப்படவில்லை. அரசாங்கம் ஏன் மெளனமாக இருக்கின்றது?

சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு அனுமதிக்க முடியாது. இவை எதுவும் மன்னிக்கப்பட முடியாத விடயமாகும். தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவத்தில் அரசாங்கம் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருப்பின் இந்த சீர்குலைவு இவ்வளவு தூரம் சென்றிருக்காது. இந்த விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் அமைதியாக இருப்பது தொடர்பில் நாம் அதிர்ச்சியடைகிறோம்.

1915 ஆம் ஆண்டு தொடர்பில் நாம் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

பெரஹரா ஒன்று பள்ளிவாசலைக் கடந்து சென்றபோது முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் கலவரமாக மாறியது. அதன் விளைவாக எஃப்.ஆர். சேனாநாயக்க, டி.எஸ். சேனாநாயக்க, டி.பி. ஜயதிலக்க போன்ற சிங்களத் தலைவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களால் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

ஹென்றி பேதிரிஸ் துப்பாக்கிதாரிகளல் சுட்டுக் கொல்லப்பட்டார். சிங்களத் தலைவர்களை மீட்டெடுப்பதற்கு தமிழ்த் தலைவராக பொன்னம்பலம் இராமநாதன் செயற்பட்டிருந்தார். சிங்கள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. ஏனெனில், அவர்களும் இந்நாட்டுக்காக பங்களிப்பினை செய்திருக்கின்றனர்.

அரசியலமைப்பில் இலங்கை மக்கள் என்பதன் மூலம் சமத்துவத்துக்கான உரிமை விதந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை அனைத்து இலங்கை மக்களாலும் அனுபவிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரையில் இனமொன்றின் அடையாளத்துக்கான அவசியம் குறித்து வலிறுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றதா என்பது எனது கேள்வியாகும்.

இவ்விவகாரங்களை ஆராய்வதற்கென பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகின்றது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியலமைப்பு தொடர்பாக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பில் நாம் இங்கு அறிந்திருக்கின்றோம்.

பழைய புண்ணை மீண்டும் புதுப்பிக்கும் வழியாகவே இது அமையும். எனவே, இந்த சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நம்பிக்கையையும் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள பயனுறுதிமிக்க நடவடிக்கை என்னவென்பதை அரசாங்கம் கூற வேண்டும் என்றார்.

இதேவேளை, எழுந்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை தொடர்பில் நாளை (இன்று வியாழக்கிழமை) அரசாங்கம் பதிலளிக்கும் என்றார்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts