
இந்த அடாவடித்தனமான செயற்பாடானது சிங்கள அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் ஓர் எச்சரிக்கையே.
இவ்வாறு கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
அஸாத் சாலி கைதாகி விடுவிக்கப்பட்டமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
´அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள், அவர்கள் தனிமனிதர்களாயினும் சரி, அல்லது ஊடகங்களாயினும் சரி பல்வேறு சட்டபூர்வமான, சட்டபூர்வமற்ற பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவது அப்படியொன்றும் புதிய விடயமல்ல. கொல்லப்பட்டதும் பலர் காணாமற் போனதுமுண்டு.
அத்தகைய நடவடிக்கைகளின் ஒரு தொடர்ச்சியாகவே அஸாத் சாலியின் கைதும் நோக்கப்பட வேண்டியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டமைக்கு இனங்களிடையே மோதலைத் தூண்டும் வகையில் இந்தியாவிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அவர் பேட்டியளித்தமையே காரணம் எனக் கூறப்பட்டது.
ஆனால் அவர் தனது பேட்டி திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாகவும், அதைத் திருத்தம் செய்யும்படியும் மேற்படி பத்திரிகைக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன் பிரதி பொலிஸாருக்கும் காட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் அவரைப் பதினைந்து நாள்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
கொழும்பிலுள்ள ஒரு பிரதான முஸ்லிம் மசூதி இடிக்கப்பட்டால் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படலாம் என அவர் தமது பேட்டியில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இவை இன மோதல்களை ஏற்படுத்தும் வகையானவை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில அழிக்கப்பட்டன. ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமையும் இனமோதல்களை ஏற்படுத்துபவையா?
அல்லது அதற்கு எதிர்ப்பை வெளியிடுவது இனமோதலை ஏற்படுத்துபவையா?. அதாவது பௌத்த சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இந்த நாட்டில் சட்டத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை.
அத்தகைய வன்முறைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தால் இன மோதல்களைத் தூண்டுகிறார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் பாயும்.
இனவெறியைத் தூண்டும் சிங்கள பௌத்த அமைப்புகள்:
ஜாதிக ஹெல உறுமய அசாத்சாலி விடுதலை செய்யப்படக் கூடாது எனவும், அது முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வாய்ப்பளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய, பௌத்த பலசேனா, தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பகிரங்கமாகவே இனவெறியைத் தூண்டிவிடுகின்றன.
வன்முறைகளை ஏவி விடுகின்றன. இவர்களில் எவருமே இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. அரசில் இருந்தாலும் ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களுக்குத் தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளியிடும் உரிமை உண்டு எனக் கூறப்படுகிறது.
இலங்கையில் ஜனநாயகத்தில் இனவாத ஒடுக்குமுறைகள் நியாயமானவையாகவும் அதற்கெதிரான குரல்கள், பயங்கரவாத நடைமுறையாகவுமே பார்க்கப்படுகின்றன. இங்கு சட்டத்தின் ஆட்சி நிலவவில்லையென நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மனம் நொந்து கூறுமளவுக்கு இங்கு தமிழ் முஸ்லிம்களுக்கு எதிராக ஒடுக்குமுறை, வன்முறை மேலோங்கியுள்ளது.
அண்மையில் வடகடல் நிறுவனத்தில் இயந்திரங்களை இயங்க வைக்கும் பணியை ஆரம்பித்து வைத்த பின்பு பத்திரிகையாளர் களைச் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னால் பத்திரிகைகளின் கழுத்தை நெரிக்க முடியும் எனப் பகிரங்கமாகவே சவால் விட்டுள்ளார்.
ஒரு கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர் இவ்விதம் பகிரங்கமாகவே வன்முறைச் சவால் விடுக்க முடியுமானால் இலங்கையின் ஜனநாயகத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.
அசாத்சாலியின் கைது ஒரு விடயத்தை மிகவும் தெளிவாகப் புரிய வைக்கிறது. அதாவது போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்றால் இன, மத பேதமற்ற முறையில் அரசியல் எதிரிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் என்பதுதான் அது.
அரசை விமர்சிப்பவர்கள் கொல்லப்படுவதும் காணாமற் போவதும் கைது செய்யப்படுவதும் இலங்கையில் இதுதான் முதல் தடவையல்ல. ஆனால் தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தை வலியுறுத்தும் முஸ்லிம் மக்கள் மேல் இழைக்கப்படும் மத ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் அஸாத் சாலி கைது செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம் அமைச்சர்கள் அமைதி பேணுவதையும் ஜம்உய்துல் லாமா சபை ஜனாதிபதிக்கு இரக்கம் காட்டும்படி ஒரு கடிதத்தை எழுதிவிட்டு வாளாவிருப்பதையும் மிகவும் கண்டனத் துக்குரியவையாகவே நாம் பார்க்கிறோம்.
அஸாத் சாலியின் கைது, உதயன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல சம்பவங்கள் அரசை விமர்சிப்பவர்களின் வாயைப் பூட்டி வைக்க விடுக்கப்படும் வன்முறை மிரட்டல்களென்றே நாம் கருதுகிறோம். ஒரு ஜனநாயக நாட்டில் தொடர்ந்து ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுவது அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.
ஆனால் எத்தகைய முறை மீறல்களுக்கும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய ஒரு தருணம் வரும் என்பதை நாம் இங்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(அத தெரண)
0 கருத்துகள்: