கட்டார்
அதிபர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி தனது அதிகாரங்கள் அனைத்தையும்
இன்று காலை தனது மகன் தமீம் பின் அல் தானியிடம் கையளித்தார். இன்று காலை
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இந்த மாற்றம்
தொடர்பில் அறிவித்தார்.
1995
முதல் கட்டாரின் அதிபராக இருந்து அந்நாட்டை உலகின் வளம் கொழிக்கும் நாடாக
மாற்றிய ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி இன்று முதல் தனது அதிகாரங்கள்
அனைத்தையும் 33 வயதான தனது மகனிடம் கையளிப்பதாக வரலாற்றுச் சிறப்புமிக்க
அறிவிப்பை வெளியிட்டார்.
61 வயதான ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல்
தானி இவ்வாறு அதிகாரத்திலிருந்து விலகி இளம் தலைமுறையினரிடம் பொறுப்பினைக்
கையளிப்பதானது மத்திய கிழக்கு அரசியலில் மிகவும் முக்கியமானதொரு நகர்வாக
அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகிறது.
அரபு வசந்தம் புரட்சி வரை
மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் பல தசாப்தங்களாக அதிகாரங்களை தமது
கைகளிலேயே வைத்திருக்கும் நிலை நீடித்துவந்தது. இந்நிலையில் கட்டார் அதிபர்
தானாகவே முன்வந்து அதிகாரத்தைக் கையளித்துள்ளமையானது மிக முக்கியமானதொரு
மாற்றம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
1995 ஆம் ஆண்டு தனது
தந்தை வெளிநாடு சென்றிருந்த சமயம் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி
ஆட்சியைக் கைப்பற்றினார். அச்சமயம் 8 பில்லியன் டொலராகவிருந்த கட்டாரின்
பொருளாதாரத்தை 15 வருடங்களுக்குள் 174 பில்லியன் டொலராக
உயர்த்திக்காட்டினார்.
1980 இல் பிறந்த தமீம் பின் அல் தானி ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானியின் இரண்டாவது புதல்வராவார்.
பிரித்தானியாவில் கல்வி கற்றவரான தமீம் கட்டார் இராணுவத்தின் பிரதி
கட்டளைத் தளபதியாகவும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் இதுவரை
கடமையாற்றி வந்தார்.
அத்துடன் 2022 இல் கட்டாரில் நடைபெறவுள்ள
பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகவும்
இவர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்: