பம்பலப்பிடிய இளம் வர்த்தகர் சியாம் உஸாம்தீனின் படுகொலை இடம்பெற்று மூன்று வாரங்கள் கழிந்தும் பொது மக்களாலும் ஊடகங்களாலும் பரவலாகப் பேசப்படும் விடயமாக அது மாறியிருக்கிறது.

கடந்த மே 22ஆம் திகதி காணாமல் போன சியாமின் கொலை தொடர்பாக விசாரணை நடத்துப் இரகசியப் பொலிசாருக்கு நாளாந்தம் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளன.

நுகேகொடை கந்தேவத்தையில் சியாமின் காரை நிறுத்திவிட்டு பிக்அப் வாகனத்திற்கு மாற்றிய இடத்திலிருந்து வைத்திய நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா மட்டும் இல்லாதிருந்தால் சியாமின் படுகொலையம் இந்த நாட்டில் இடம்பெறும் கண்டுபிடிக்கப்படாத பல கொலைகள், காணாமல் போன சம்பவங்களில் ஒன்றாகவே இருந்திருக்கும்.

சியாமின் கொலை தொடர்பாக சி.சி.ரி.வி. கமரா மூலம் பெற்ற தகவல்களையடுத்து இரகசியப் பொலிஸார் முதலில் கைது செய்தது சியாமின் ஆருயிர் நண்பரான பௌஸுதீன் என்பவரையே. சியாமின் மனைவியுடன் காணாமல் போன மறு தினம் சென்று முறைப்பாடு செய்ததும் பௌஸ்தீனே.

பௌஸ்தீனிடம் இரகசியப் பொலிஸார் முதலில் விசாரணை செய்தனர்.

ஐயோ சர். சியாம் எனது நல்ல நண்பர். எமக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது ஆத்ம நண்பருக்கு இப்படி ஒரு அநியாயத்தை ஏன் செய்வேன் இந்தப் பாவத்தைச் செய்தவனுக்கு அல்லாஹ் தண்டனை வழங்குவான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சியாமுக்கு நடந்த இந்த அநியாயத்தை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று இரகசியப் பொலிசார் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பௌஸ்தீன் தெரிவித்துள்ளார்.

சரி நீர் கூறுவது உண்மையா பொய்யா என்று நாம் தேடிப் பார்ப்போம். உங்களை விட மோசமானவர்களை நாம் சந்தித்துள்ளோம் என்று விசாரணை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.

இது உண்மை சேர். ஏன் நான் பொய் சொல்ல வேண்டும். தினமும் தொழுபவன் நான். ஏன் இந்த பாவச் செயலைச் செய்ய வேண்டும் என பௌஸ்தீன் பொலிசாருக்கு பதிலளித்து தெரிவித்துள்ளார்.

கந்தேவத்த வைத்திய நிலையத்தின் சி.சி.ரி.வி.யின் பதிவுகளைப் பரிசீலனை செய்த போது பௌஸ்தீன் கந்தேவத்த வீதியூடாக இரவு நடந்து வருவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. சியாமின் கொலை விசாரணையின் திருப்பு முனை இங்கே ஆரம்பித்தது. பௌஸ்தீனைப் பார்த்து நீர் கூறுவது உண்மைதானா என விசாரணை செய்யும் பொலிஸ் அதிகார் மீண்டும் பௌஸ்தீனிடம் கேட்டுள்ளார்.

சத்தியமாக நான் சொல்வது உண்மை சேர் என்று பௌஸ்தீன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
மே 22ம் திகதி நீர் வெளிப்பிரதேசம் ஒன்றுக்கும் போகவில்லையா? நன்கு யோசித்துப் பதில் கூறுமாறு விசாரணை நடத்தும் அதிகாரி கேட்டுள்ளார்.

அன்று இரவு நான் எங்குமே போகவில்லை. அதனை என்னால் உறுதியாகக் கூற முடியும் என்று பௌஸ்தீன் பதிலளித்துள்ளார். இந்த பதிலுடன் சிசிரிவி சமராவில் பெற்ற பதிவுகளை பௌஸ்தீனுக்கு அதிகாரிகள் போட்டுக் காட்டியுள்ளனர். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பௌஸ்தீனுக்கு தன்னை அறியாமலே வியர்வை கொட்டி அணிந்திருந்த ஆடைகள் நனைந்துள்ளதுடன் பயந்து நடுங்கியுள்ளார்.

இதனைக் கண்ட பௌஸ்தீன் எல்லாம் முடிந்து விட்டது. நாம் எல்லோரும் மாட்டிவிட்டோம் என்று பொலிசார் முன் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நேரமும் நீர் பொய்தான் சொன்னீர். இனியும் பொய் சொல்லித் தப்ப முடியாது. ஏன் இனியாவது பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த இரவு நேரம் கந்தேவத்தைக்குச் சென்றது எதற்காக? எல்லாம் அம்பலமாகிவிட்டது. இனியும் பொய் சொல்ல முடியாது என உணர்ந்த பௌஸ்தீன் சியாம் கொலை பற்றிய விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பெறுமதியான கடிகாரம் ஒன்று இருக்கின்றது அதனை வாங்குவதற்கு போவோம் என்று கூறியே சியாமை அழைத்துச் சென்றேன். சியாமும் நானும் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று இரவு சாப்பாட்டை எடுத்து விட்டு அவரது மோட்டார் காரிலே கந்தேவத்தைக்குச் சென்றோம். கந்தேவத்தையில் வைத்து வாகனத்தை நிறுத்துமாறு கூறினேன். அப்போது முன்பு பேசியிருந்தபடி கெப் வாகனம் அங்கு வந்திருந்தது. சியாமின் கழுத்தைப் பிடித்து தள்ளி அவரை கெப் வாகனத்துக்கு பாரம் கொடுத்தேன்.

பௌஸ்தீனின் தகவலையடுத்து கொட்டாவையைச் சேர்ந்த கிருசாந்தவை பொலிசார் கைது செய்தனர். இந்த இருவரும் தெரிவித்த தகவல்களின்படி இக்கொலைக்கும் பொலிசாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இக்கொலைக்கும் பொலிசாருக்கும் தொடர்பு இருப்பது வெளியானது முதல் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் விசாரணைகளை இரகசியப் பொலிஸ் பிரிவிற்கு ஒப்படைத்துள்ளார்.

சியாமின் கொலையைச் செய்வதற்கு பொலிசாருக்கு 30 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இத்தகவலுடன் மேல் மாகாண வடக்கு பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பணி புரிந்த சப் இன்ஸ்பெக்டர் இந்திக பமுனுசிங்க கான்ஸ்டபிள்களான காமினி சரச்சந்திர, ஹஸந்த சஞ்சீவ, கெலும் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க விடுத்த பணிப்புரையையடுத்து இவர்கள் பதவி நீக்கஞ் செய்யப்பட்டனர்.
அதன் பின் இச்சம்பவத்தின் சூத்திரதாரியான பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன களத்திற்கு வருகின்றார்.

கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்திற்கு உதவியாகச் செயற்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவை கடந்த 6ம் திகதி முதன் முறையாக இரகசியப் பொலிஸார் முன்னிலையில் ஆஜரானார். துருவித் துருவி மேற்கொண்ட விசாரணையின் பின் இக்கொலைக்கும் வாஸுக்கும் தொடர்பு இருப்பது ஊர்ஜிதமானது. இதன்படி வாஸ் குணவர்தனவைக் கைது செய்த இரகசியப் பொலிசார் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு பின் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார். இம்மாதம் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் வேறுபல கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு முன் வாஸ் குணவர்தன தாய்லாந்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார். இக்கொலையைச் செய்ய திட்டமிட்டோரே இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது.

சியாமின் கொலை தொடர்பாக ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான கிரிசான் விஸ்வராஜ் கோரளே என்பவரும் கைது செய்யப்பட்ட மற்றவராவார். இவர் சீனாவிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்து வருகிறார். சியாமினால் நடத்தப்பட்ட பாதணித் தொழிற்சாலைக்கு பௌஸ்தீன் 400 லட்சம் ரூபாவை முதலீடு செய்துள்ளதாகவும் அதனை சியாம் வழங்காததனாலே அதற்கொரு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காகவே பௌஸ்தீனின் வேண்டுகோளின் பேரில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸிடம் ஒப்படைத்ததாக கிரிசாந்த தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இத்தகவலை கடந்த 13ஆம் திகதி கொழும்பு மேலதிக மாஜிஸ்ரேட் நீதவான் முஹம்மத் சஹாப்தீன் முன்னிலையில் வாஸ் குணவர்தனவை ஆஜர்படுத்திய போது இரகசியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நான் ஒரு கொலையாளி. என்னை எப்போதும் உள்ளே வைப்பதற்கு உங்களால் முடியாது. நான் வெளியே அந்த நாளில் உங்களுக்குச் செய்யும் வேலையைப் பார் என்று வாஸ் குணவர்தன தம்மை அச்சுறுத்தியதாக சியாம் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் இரகசியப் பொலிஸ் பிரிவின் உதவி அத்தியட்சகர் சானி அபேசேகர உட்பட்ட அதிகாரிகள் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

சியாமிடமிருந்து தமக்கு வரவேண்டிய 400 இலட்சம் ரூபாவை எனக்குப் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தால் உங்களிடமிருந்து எனக்கு வரவிருக்கும் ஒரு கோடி 85 லட்சம் ரூபாவில் 100 லட்சம் ரூபாவை வாஸ் குணவர்தனவுக்கு வழங்குமாறும் எஞ்சிய 8500 000 ரூபாவை எனக்கே வைத்துக் கொள்ளுமாறும் பௌஸ்தீன் கூறியதாக கிரிசாந்த கூறியதாக நீதிமன்றத்திற்கு இரகசியப் பொலிசார் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைச் செய்வதற்கு வாஸ் விரும்பியதால் பலமுறை தெஹிவளை நதிமாலையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று உரையாடியதாகவம கிரிசாந்த தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி சியாமைக் கடத்திய பின் வாஸ் குணவர்தனவிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பினையடுத்து சியாமை வாஸ் குணவர்தனவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு வாஸின் மகன் ரவிந்து குணவர்தனவும் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கெப் வாகனத்துக்கு ஏறியதாகவும் கிரிசாந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பின்பு சியாமை கிரிசாந்தவின் வாகனத்திற்கு ஏற்றுக் கொண்டதாகவும் கடுவெல பாலத்தைக் கடந்த பின் அங்கிருந்த ஒருவர் தன்னுடன் பேசி நாம் சியாமை முடித்து விடுவோம் அது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம். நாளை காலை வந்து அவனை எடுத்துச் செல்லுமாறு கூறியதாகவும் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

சியாம் கையில் கட்டியிருந்த 25 இலட்சம் ரூபாய் பெறுமதிமிகு கைக்கடிகாரத்துக்கு என்ன நடந்தது?

எனது சகோதரர் சியாமுக்கு பௌஸ்தீன் நான்கு கோடி ரூபாவுக்கு மேல் கடன் வழங்க வேண்டியிருக்கும் நிலையில் இக் கொலையைத் திசை திருப்புவதற்காகவே பௌஸ்தீன், சியாம் காணாமல் போனது பற்றிய பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தனக்கு நான்கு கோடி தரவிருப்பதாகத் தெரிவித்திருப்பதாக சைலாஸ் ஹுஸாம்தீன் தெரிவிக்கின்றார்.

இதேநேரம், தனது சகோதரர் கையில் கட்டியிருந்த 25 இலட்சம் ரூபாய் பெறுமதிமிகு கைக்கடிகாரமும் வாகனத்திலிருந்த காசோலைப் புத்தகங்களும் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதணித் தொழிற்சாலையிலிருந்து 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட காசோலைகளையும் பௌஸ்தீன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதில் சில காசோலைகள் மாறிவிட்டன. மற்றும் சில காசோலைகளை நாம் மாறவிடாது நிறுத்தினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

காசோலைகளை எடுத்துச் சென்றது தொடர்பாகவும் இரகசியப் பொலிஸாருக்கு தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அல்ஹாஜ் சைலாஸ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts