தருஸ்மன்
அறிக்கையை ஏற்றுகொள்ள முடியாது என்று கூறிய அரசாங்கத்தால்
உருவாக்கப்பட்டதே இந்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகள். எதிர் கட்சிகளோ, நாங்களோ கற்றுக் கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என கோரவில்லை.
இந்நிலையில் அதன் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்
என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி
கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம், 13 ஆவது
சீர்திருத்தம் அல்ல 13 பிளஸை பெற்றுகொடுப்போம் என அரசாங்கம் கூறியிருந்தது.
ஆனால் இன்று ஒன்றுமே நடைமுறையில் இல்லை.
இந்நிலையில் வடக்கில்
செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அங்கு சுதந்திரமான நிலை இல்லை. அண்மையில் உதயன் மீது தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டது. அதாவது வடக்கில் தேர்தலை நடத்த விடாமல் அரசாங்கத்தால்
இவ்வாறான அடாவடி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தேர்தலை நடத்த விடாமல்
மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளே இவை.
மேலும் வடமாகாண சபை தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த அரசாங்கத்தில்
யாரும் இல்லை. எனவேதான் டக்களஸ் தேவானந்தாவை அனுப்பி இவ்வாறான சூழ்ச்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் வடக்கில் தேர்தல்
நடத்தப்பட்டால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே நிச்சயம் வெற்றி பெறும்
என்றார்.
0 கருத்துகள்: