
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழக்குவதற்கு தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணியின் வேட்பாளர் அய்யூப் அஸ்மினுக்கே அந்த போனஸ் ஆசனம் ஒன்றினை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை ஐந்து வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், முதலாவது வருடத்தை யாருக்கு வழங்குவது என்று இன்னும் ஓரிரு தினங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, ஐந்து வருட மாகாண சபை பதவி காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளனர். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில், வடமாகாண சபையில் முஸ்லிம் பதவி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்துகள்: