ஆடம் லான்சா
                                                            ஆடம் லான்சா



டிசம்பர் 14 ஆம் தேதி 2012 அன்று, அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது.
ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் தான் இந்த கொலைகளை துப்பாக்கியின் துணையோடு நடத்தியுள்ளான்.
வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆடம், அவனுடைய அம்மாவுடன் நியூட்டன் நகரில் வசித்து வந்துள்ளான். ஆதாமின் தந்தை பீட்டர் லான்சா, ஜி.ஈ. கேபிடல் நிறுவனத்தின் துணைத்தலைவராக உயர் பொறுப்பில் பணிபுரிபவர். பெற்றோர் இருவரும் மூன்று ஆண்டுகளாக விவாகரத்து முடிந்து பிரிந்து வாழ்கின்றனர்.
சம்பவத்தன்று, தாயின் கைத்துப்பாக்கியால் அவரை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்று விட்டு, வீட்டில் இருந்த இன்னும் ஒரு நீளத் துப்பாக்கியையும் தானியங்கி துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு காரில் சாண்டி ஹூக் பள்ளிக்குச் சென்றிருக்கிறான் ஆடம். பள்ளியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கண்ணில் அகப்பட்டவர்களை குழந்தைகள் என்றும், ஆசிரியர்கள் என்றும் பார்க்காமல் சுட்டுத் தள்ளியுள்ளான். இறுதியில் தன் உயிரையும் மாய்த்து கொண்டான்.
இந்த சம்பவம் அமெரிக்க மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அமெரிக்காவில் பொது இடங்களில் தனி நபர்கள் இது போன்று கொலைச் செயல்களில் ஈடுபடுவது இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகும். 1982-ம் ஆண்டு முதல் 61க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடந்திருப்பதாக மதர் ஜோன்ஸ் இணைய தளம் தெரிவிக்கிறது. அக்கொலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் உரிமம் பெற்றவையாகவே இருந்துள்ளன. இச்சம்பவங்களை நிகழ்த்திய நபர்கள் பெரும்பாலும் சகஜமாக வாழ்ந்து அமெரிக்க போட்டியில் தோற்றுப் போனதால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றனர்.
இக்கொலைகள் நடக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், ‘ஒவ்வொரு பள்ளியிலும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை அரசு நியமிக்க வேண்டும்’ என்று அமெரிக்க துப்பாக்கிக் கழகத்தின் எதிர் கருத்துக்களும் வெளியாகும்.
தற்போதைய படுகொலையைப் பார்க்கும் போது குழந்தைகளைக் கூட பாதுகாக்க முடியாத அமெரிக்க சமூகத்தின் தோல்விக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?
ஆடம் லான்சாவிற்கு, ஆட்டிசம் எனப்படும் மன இறுக்க குறைபாட்டின் ஒரு வகையான அஸ்பெர்கஸ் இருப்பதாக அவரது 5 வயதில் கண்டறியப்பட்டது. யாருடனும் பேசாமல், பழகாத ஒரு தனிமை விரும்பியைப் போல் இருந்தான் என்று அக்கம் பக்கம் வீட்டார் அவனுடைய குணாதிசயங்களை பற்றி கூறியுள்ளனர்.
2010 உயர் நிலைப் பள்ளி ஆண்டு புத்தகத்தில் அவனுடைய புகைப்படத்திற்கு பதிலாக ‘காமிராவுக்கு வெட்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் சராசரிக்கு அதிகமான புத்திசாலி என்று அவனது பள்ளி நண்பரகள் நினைவு கூர்கிறார்கள்.
ஆடம் லான்சாவின் தாய் நான்சி லான்சா
ஆடம் லான்சாவின் தாய் நான்சி லான்சா
அஸ்பெர்கஸ் வகை மன இறுக்கம் புலனுணர்வுகள், பேச்சுத்திறன் இவற்றை பாதித்து சமுதாய தொடர்புகளை துண்டிக்க செய்யும் ஒரு குறைபாடு. ஆட்டிசம், மரபு ரீதியாகவும் குழந்தை கருவில் இருக்கும் போதோ பிறந்து சில நாட்களிலோ சுற்றுச் சூழல் அல்லது உணவுப் பொருட்களில் இருக்கும் உலோக நச்சுக்கள், கதிர்வீச்சு மூலம் நரம்பு மண்டலமும் மூளையும் தாக்கப்படுவதால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் மதிப்பீட்டுப்படி, நாடு முழுவதும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம், மற்றும் சிறப்பு பராமரிப்புக்கு ஆண்டுக்கு $137 பில்லியன் தேவைப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க $2.3 மில்லியன் தேவைப்படும்.
அஸ்பெர்கஸ் வகை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விருப்பத்துக்கு மாறாக ஏதாவது நடக்கும் போது கோபத்தையும், ஆத்திரத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் நடந்து கொள்வார்கள்.
பெற்றோரின் அரவணைப்பும், தொடர்ச்சியான மருத்துவ உதவியும், ஆலோசனையும், சிறப்புக் கல்வியும் தான் அஸ்பெர்கஸ் குறைபாடு உடையவர்களை இயல்பான வாழ்க்கை நடத்த உதவும் வழிமுறைகள் ஆகும், இதை வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை எல்லா மருத்துவ சேவையும், மருத்துவக் காப்பீடு திட்டம் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் மனநல நோய்களுக்கான சிகிச்சைகளை பெரும்பாலும் மறுத்து விடுகின்றன. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயது மகனுக்கு தாயான “லீசா லாங்” என்பவர் “நான் தான் ஆடம் லான்சாவின் தாய்” என்ற தலைப்பில் எழுதிய பதிவில் தனது மகனை சமாளிக்க முடியாமல், முறையான மருத்துவ சிகிச்சையும் அளிக்க முடியாமல் போராடும் துயரத்தை உருக்கமாக விவரித்துள்ளார்.
அரசு உதவியை பெற வேண்டும் என்றால் மன நோய் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மீது காவல்துறையில் கிரிமினல் வழக்கு ஒன்றை பதிவு செய்து விட்டால் அரசாங்கம் அவர்களுக்கு வைத்தியம் என்பதை சிறைச்சாலையில் அடைத்து வைத்து தரும். அமெரிக்காவின், மனித உரிமை கண்காணிப்புத் துறையின் கணிப்புப்படி, அமெரிக்க சிறைச்சாலைகளில் மனநலம் குன்றியவர்களின் எண்ணிக்கை 2000-ம் முதல் 2006 ஆண்டுக்குள் நான்கு மடங்காக அதிகமாகியிருக்கிறது.
அத்தியாவசிய மருத்துவ சேவைகள் கூட பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற சமூகக் கட்டமைப்பில் தனித்து விடப்படும் நபர்களும் குடும்பங்களும் உடல் நல, மன நலக் குறைபாடுகள் தொடர்பான முழு பொருளாதார மற்றும் மனவியல் சுமைகளை தாமே சுமக்க வேண்டியிருக்கிறது.
ஆடம் லான்சாவின் தாய் நான்சி லான்சா, விவாகரத்துக்கு பிறகு வீட்டிலேயே வைத்து ஆதாமை பராமரித்து வந்திருக்கிறார். பணமும் வசதி வாய்ப்பும் இருந்ததால்தான், திருமதி நான்சி லான்சாவால் விவாகரத்து ஆன பிறகும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடியே பிரச்சனை உடைய மகனை பராமரிக்க முடிந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் மகனின் நலம் கருதி அவனை மனநோய் காப்பகத்தில் கொண்டு சேர்க்க முடிவு செய்திருக்கிறார். அதை அறிந்ததிலிருந்து ஆடம் கோபமாக இருந்திருக்கிறான்.
அமெரிக்காவின் பெரும்பான்மை பதின்ம வயதினரைப் போல கணினி மற்றும் வீடியோ விளையாட்டுகளில் மிகவும் நாட்டம் கொண்டு, குழுவாக இணையத்தின் மூலம் விளையாடுவதிலும் ஆடமுக்கு பெருத்த ஈடுபாடு இருந்துள்ளது. அத்தோடு அமெரிக்க சமூகத்தின் தனிநபர் வாதம், ‘தகுதியுள்ளது மட்டும் தப்பிப் பிழைக்கும்’ என்ற கோட்பாட்டில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் தந்தை, அமைதியற்ற வீட்டுச் சூழல் அனைத்தும் சேர்ந்த ஆடம் லான்சாவின் மன இறுக்க குறைபாட்டை மோசமடையச் செய்திருக்கின்றன.
மருத்துவ உதவிக்கு இடையூறு மிக்க மனிதத்தன்மையற்ற சட்டத்திட்டங்களை வகுத்துள்ள அமெரிக்க அரசாங்கம், தங்கு தடை இன்றி துப்பாக்கி வாங்குவதற்கு வசதியான சட்டச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. “வேர்மொன்ட்” வகை துப்பாக்கி வகை வாங்க 16 வயது முதல் அனுமதி, நீளத் துப்பாக்கி வாங்கும் உரிமம் 18 வயதுக்கு மேல் அனுமதி, தானியங்கி கைத்துப்பாக்கி வாங்கும் உரிமம் 21 வயதுக்கு மேல் அனுமதி என்று வயது அடிப்படையில் துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன.
ஆடம் லான்சாவின் தந்தை பீட்டர் லான்சா
ஆடம் லான்சாவின் தந்தை பீட்டர் லான்சா
துப்பாக்கி விற்பனையை தடுத்து நிறுத்தும் எந்த முயற்சியையும் தேசிய ரைபிள் சங்கம் என்ற அமைப்பு பண பலத்தையும் அதிகார பலத்தையும் கொண்டு தடுத்து நிறுத்துகிறது. துப்பாக்கி உற்பத்தி செய்யும் முதலாளிகளோடு, பல ஆயிரக்கணக்கான சாதாரண அமெரிக்கர்களும் துப்பாக்கி சட்டங்களை மாற்றுவதை எதிர்க்கின்றனர். ‘சக மனிதர்களை நம்ப முடியாது, என்னையும் என் குடும்பத்தையும் நானே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று சமூகச் சூழலை சுட்டிக் காட்டி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.
இத்தகைய சூழலில் துப்பாக்கிகள் வாங்கி சேகரிப்பது என்பது திருமதி லான்சாவின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. ஆடம் லான்சாவையும் அவரது சகோதரனையும் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு அழைத்து போவது, அவர்களுக்கு சுடுவதற்கான பயிற்சி அளிப்பது என்று வளர்த்திருக்கிறார்.
மனக் குறைபாடுடைய ஆடம் லான்சா தனது விருப்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிக்காட்ட நினைக்கும் போது கைக்கெட்டிய தூரத்தில் கொலைக் கருவிகள் சட்ட பூர்வமாக வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அவற்றை பயன்படுத்தும் முறையான பயிற்சியும் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த கொடூரமான நிகழ்வுக்கு உடனடி காரணமாக இருந்திருக்கிறது.
குழந்தைகளின் உயிரிழப்பிற்காக கண்ணீர் சிந்திய அதிபர் ஒபாமா, இதை இனியும் தொடர அனுமதிக்க போவதில்லை என்று வாய்ச் சவடால் விட்டாலும், எந்தவிதமான செயல் திட்டத்தையும் முன்வைக்காமல் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஹவாய்க்கு குதூகலமாக குடும்பத்துடன் சென்று விட்டார்.
மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. துப்பாக்கியின் விசைகளை அழுத்தியது ஆடம் லான்சாவாக இருந்தாலும் அவன் கையில் இந்த துப்பாக்கியை வைத்த அமெரிக்க ஆயுத தளவாட முதலாளிகள்தான் இந்த கொலைகளுக்கான மூல காரணம் என்பதால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதுவரை அன்றாடம் இத்தகைய மரண பயத்தில்தான் அமெரிக்க மக்கள் வாழ வேண்டும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts