ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளரைச் சந்திக்கவுள்ள ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ், அவரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளது. இந்த
அறிக்கையில் முஸ்லிம்களின் பிரதான பிரச்சினைகள், அண்மைக்கால நிகழ்வுகள்
தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத்
தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும்
நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ரி. ஹஸன் அலி,
நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பு இன்னும் ஒரு தினங்களில் இடம்பெறவுள்ளது.
இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் கொண்டதான அறிக்கை ஒன்றினை அவரிடம்
கையளிக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.
இதேவேளை, இந்த அறிக்கையில்
வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் காணப்படும் தடைகள், காணிப்
பிரச்சினைகள், நாடாளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களக்
கடுங்கோட்பாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், பள்ளிவாசல்கள்
மீதான தாக்குதல்கள் போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இவ்வாறானதொரு அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் கையளிப்பது தொடர்பில் அரசாங்கம்
தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
நாட்டின் நற்பெயருக்குக்
களங்கம் ஏற்படுத்தி நாட்டை சங்கடமான நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸும் சதி செய்வதாக சிங்கள
அமைச்சர்கள் சில விசனம் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஹஸன் அலி, இவ்வாறானவர்களின் விமர்சனங்கள் கருத்துகள் தொடர்பில் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை.
நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் தனித்துவமான செயற்பாட்டையே முன்னெடுப்போம்.
எமது அரசியல் உயர்பீடத்தைச் சேர்ந்த ஐவரை அரசாங்கம் தன்னுடன் இணைத்துக்
கொண்ட போது நாம் அவர்களை எமது கட்சியிலிருந்து இடை நிறுத்தினோம்.
எனவே, அரசாங்கத்தை நாடி பிடித்து அதற்கேற்ப நடக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.
அத்துடன் சில அட்டைக் கத்தி வீரர்களான அமைச்சர்களின் கருத்துகளையும் நாங்கள் கருத்தில் கொள்ளப் போவதும் இல்லை. என்று கூறினார்.
0 கருத்துகள்: