கோழிக்கோடு
பல்கலைக்கழகத்தில் அல் கொய்தா உறுப்பினர் இப்ராஹிம் அல் ருபைஷ் எழுதிய
கவிதை மாணாக்கர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது சர்ச்சை கிளப்பியுள்ளது.
அல் கொய்தா உறுப்பினர் இப்ராஹிம் அல் ருபைஷ். அவர் எழுதிய கவிதை கோழிக்கோடு
பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு ருபைஷ் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் கைது
செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள குவான்டானமோ பே
சிறையில் 5 ஆண்டுகள் இருந்தார். அப்போது அவர் எழுதிய கவிதை தான்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து அவர் கடந்த
2006ம் ஆண்டு 13ம் தேதி சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி சவூதி பாதுகாப்பு அதிகாரிகள்
85 இஸ்லாமியப் போராளிகள் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டனர். அதில்
ருபைஷின் பெயரும் இருந்தது. ருபைஷின் கவிதை குறித்து கோழிக்கோடு
பல்கலைக்கழக கல்விக் குழு உறுப்பினரும், பனம்பிள்ளி அரசு கல்லூரியின் துணை
பேராசிரியருமான சி.ஆர். முருகன் பாபு கூறுகையில்,
“இந்த கவிதையை
பாடத்திட்டத்தில் சேர்க்க யார் பரிந்துரைத்தார்கள் என்று தெரியவில்லை.
கவிஞர் பற்றிய விவரங்களைத் தேடியபோது அவர் குவான்டனமோ பே சிறையில் இருந்தது
மட்டும் தெரிய வந்தது. அவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது
எங்களுக்கு தெரியாது. தற்போது இந்த கவிதையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் அதை
பாடத்திட்டத்தில் இருந்து நீக்க அதிகாரிகள் முடிவு செய்தால் அதில்
எங்களுக்கு ஆட்சேபம் இல்லை” என்றார்.
கடந்த 2011ம் ஆண்டு ருபைஷின் கவிதை கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: