பம்பலப்பிட்டி கோடீஸ்வர வியாபாரியான மொஹமட் சியாமை கடத்தி, கொலை செய்தமை தொடர்பான வழக்கில் முதலாவது சந்தேக நபரான நிசாந்த கோரளே, தன்னை குறித்த வழக்கின் மற்றொரு சந்தேக நபரான வாஸ் குணவர்தனவின் சட்டத்தரணிகள் அச்சுறுத்தியதாக மன்றில் தெரிவித்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் புதுக்கடை, 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் நீதிபதி எம்.எம். சஹாப்தீன் முன்னிலையில் இடம்பெற்ற போதே சந்தேக நபர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான வாஸ் குணவர்தன உள்ளிட்ட 7 சந்தேக நபர்களும் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், மனுதாரர் தரப்பில் மன்றில் பிரசன்னமாகியிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான சானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணை அறிக்கையொன்றினை நீதிபதிக்கு வழங்கினார்.

இந்நிலையில், சட்டமா அதிபர் சார்பாக மன்றில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி வசந்த பெரேரா கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளையும் சட்ட மா அதிபர் தொடர்பான விசனங்களையும் மறுத்து மன்றில் விளக்கமளித்தார்.

சந்தேக நபர்கள் சட்டத்துக்கு முரணான வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படவில்லையென உறுதியாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி வசந்த பெரேரா, பயங்கரவாத தடைச் சட்டம், குற்றவியல் தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழும் சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவாகியிருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழுள்ள ஒருவரிடம் வாக்கு மூலம் பெறும் அதிகாரம் நீதிவானுக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் கடந்த தவணையின்போது சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தவறானது எனவும் தர்க்க ரீதியற்றது எனவும் அரச சட்டத்தரணி தனது வாதத்தில் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த தவணையில் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 3 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்ததாக சுட்டிக்காட்டிய அரச சட்டத்தரணி வசந்த பெரேரா, சந்தேக நபர்கள் அச்சட்டத்தரணிகளுக்கு மன்றில் ஆஜராவதற்குரிய எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லையெனவும் அதனால் அன்றைய தினம் குறித்த சட்டத்தரணிகள் முன் வைத்த விடயங்கள் அடிப்படையற்றவை எனவும் குறிப்பிட்டார்.

இதன் போது வாஸ் குணவர்த்தன தவிர்ந்த ஏனைய இரு சந்தேக நபர்களிடம் நீதவான் விளக்கம் கோரிய நிலையில், கடந்த 9 ஆம் திகதி வழக்கு விசாரைணயின்போது குறித்த சட்டத்தரணிகளுக்கு தமது சார்பில் ஆஜராக தாம் வேண்டவில்லையென அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற விசாரணைகளின்போது சட்டத்தரணி அஜித் பத்திரனவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி அநுர செனவிரட்ன மன்றில் ஆஜராகி அப்போது தடுப்புக்காவலில் இருந்த நான்காவது சந்தேக நபரான இந்திக பமுனுசிங்ஹ, ஏழாவது சந்தேக நபரான கெலும் ரங்கன திஸாநாயக்க ஆகியோர் ஆகியோர் தொடர்பில் மன்றில் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே அரச சட்டத்தரணி குறித்த இருவரின் அனுமதியின்றியே கடந்த தவணையில் குறித்த சட்டத்தரணி நீதிமன்றின் முன் தடுப்புக்காவலில் இருந்த சந்தேக நபர்கள் தொடர்பில் கருத்துகளை முன் வைத்ததாகவும் எனவே, அது செல்லுபடியற்றது எனவும் வாதிட்டார்.

இதன்போது இக்கொலை வழக்கின் முதல் சந்தேக நபரான வர்த்தகர் நிசாந்த கோரளே தனது கையை உயர்த்தி நீதிமன்றின் கவனத்துக்கு விடயமொன்றை கொண்டு வர அனுமதி கோரினார். இதனை அனுமதித்த நீதிபதி சஹாப்தீன், அவர் கூறுவதை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்ததுடன் அவரது விளக்கத்தையும் செவிமடுத்தார்.
இதன்போது நீதிமன்றிடம் கருத்துக்கூறிய முதலாவது சந்தேக நபரான நிசாந்த கோரளே, மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் சட்டத்தரணிகளால் தான் அசசுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

வாஸுடன் ஒன்றாக இருந்து அவருக்கே குழி பறித்ததாக அவர்கள் தெரிவித்ததாகவும் இரு உன்னை கவனித்துக் கொள்கிறேன் என அவர்கள் தன்னை அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் தனது மனச்சாட்சிப்படியே குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்ததாகவும் அதில் எந்தவொரு அழுத்தமும் இல்லையென நீதிபதியிடம் தெரிவித்த சந்தேக நபரான நிசாந்த கோரளே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை அச்சுறுத்தவில்லையெனவும் வாஸ் குணவர்தனவின் சட்டத்தரணிகளே தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரின் குற்றச்சாட்டானது சட்டத்தரணிகளான அஜித் பத்திரன மற்றும் அநுரசெனவிரத்ன ஆகியோரை நோக்கியதாக இருந்தது.

இந்நிலையில், தனது வாதத்தை ஆரம்பித்த சட்டத்தரணி அஜித் பத்திரன, சந்தேக நபரை தாம் ஒரு போதும் அச்சுறுத்தவில்லையெனவும் சந்தேக நபர் சுமத்தும் குற்றச்சாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சொல்லிக் கொடுத்தது எனவும் வாதிட்டார்.

அத்துடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி முதலாவது சந்தேக நபரை அரச சாட்சியாக மாற்றுவதற்கு முனைவதாகவும் சட்டத்தரணி அஜித் பத்திரன குற்றம் சுமத்தினார்.

தானும் சட்டத்தரணி செனவிரத்னவும் சந்தேக நபரின் குடும்பத்தினரின் வேண்டுதல்களுக்கு அமையவே சந்தேக நபரை சந்தித்ததாகவும் அவரை ஒருபோதும் அச்சறுத்தவில்லையெனவும் இதன் போது அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் எழுந்த அரச சட்டத்தரணி வசந்த பெரேரா, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை அச்சுறுத்தவில்லையெனவும் சட்டத்தரணிகளே அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய, தான் முதன் முறையாக வாஸ் தொடர்பில் குறித்த தினமே ஆஜராவதாகவும் எனவே, அவர் தொடர்பிலான எழுத்து மூல விளக்கமொன்றினை அடுத்த தவணையின் போது சமர்ப்பிப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்குமாறும் நீதிபதியைக் கோரினார்.

இந்நிலையில் அதனை அனுமதித்த நீதிபதி, எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை நேரம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் வரை வாஸ் குணவர்தன உள்ளிட்ட 7 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டார்.

இந்நிலையில் குற்றப் புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் கோரியதற்கிணங்க சந்தேக நபர்களான மூன்று பொலிஸாரின் உத்தியோகபூர்வ சீருடைகளை டீ.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் 3 கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதித்தது.

அத்துடன் இக்கொலை வழக்கின் நான்காவது சந்தேக நபரான இந்திக பமுனுசிங்ஹ, மஹர நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றின் பிரதான சாட்சியாக உள்ள நிலையில் அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி சாட்சியமளிக்க அனுமதிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இக்கொலை வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts