
(எம்.பைஷல் இஸ்மாயில்)
இன்றைய காலகட்டத்தில் நாட்டின் பல பாகங்களில் முஸ்லிம்களின் வியாபார
நிலையங்களும் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களும் தொடராக தாக்கப்படுவதும்
இச்செயல் இலங்கையின் இன நல்லுறவிற்கு பாரிய சவாலாக அமைந்து வருகின்றது என
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தனது கண்டன
அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒரு சில இனவாதிகளினால் தொடச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும்
அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில்
மஹியங்கணை மஸ்ஜிதுல் அறபா ஜூம்ஆ பள்ளிவாசல் சென்ற 11 ஆம் திகதி இனம்
தெரியாத காடையர்களினால் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டது.
அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்காக தயாராகிக்
கொண்டிருந்த போது பிரதேசத்தின் ஊவா மாகாண காணி அமைச்சர் ஜூம்ஆ தொழுகையை
நடாத்த வேண்டாமெனவும், இதை மீறி தொழுகையை நடாத்ததினால் பாரிய பிரச்சினைகள்
ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து பள்ளிவாசல்
மூடப்பட்டுள்ளது என்ற செய்தியை நான் அறிந்து கொண்டேன். இது எனக்கு பெரும்
அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியது.
இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு நாட்டில் ஒரு இலங்கை பிரஜை தான்
விரும்பியவாறு தங்களின் மத சுதந்திரத்தையும், சம உரிமையையும், மத
அனுஷ்டானங்களையும் பின்பற்றுவதற்கு உரிமை உடையவராக உள்ளனர். இது இவ்வாறு
இருக்கும் போது இனமத உறவை சீர்குலைக்கும் ஒரு குழுவினர் இன்று அடக்கு
முறைகளையும் இன பயங்கரவாதத்தையும் தோற்றுவிப்பதை ஒரு போதும் சகித்துக்
கொண்டு ஒரு பார்வையாளர்களாக நாம் இருந்துவிட முடியாது.
முஸ்லிம்;கள் ஒருபோதும் பிற மதத்தவர்களை அவமதித்து நடந்ததும் கிடையாது.
அவர்களின் மத வழிபாட்டிலோ அல்லது மார்க்க கடமைகளை நிறைவேற்ற இடையூறாகவோ
ஒருபோதும் இருந்ததும் கிடையாது.
எமது ஜனாதிபதி மூன்று தசாப்த காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாத யுத்தத்தை
ஒரு முடிவுக்கு கொண்டு வந்த பெருமையையும், நற்பெயரை மக்கள் மத்தியில்
நற்பெயரையும் கொண்டுள்ளார். இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், மார்க்க
வழிபாடுகளை திட்டமிட்டு சீர் குலைக்கும் முயற்சியில் ஈடுபடும்
இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை உடனடியாக தடுக்கும் முயற்சியில் எமது
ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும்
முயற்சியிக்கு முன்வரவேண்டும்.
கடந்த முப்பது ஆண்டுகால யுத்த நிறைவின் பின்னர் சகல மதத்தவர்களும்
ஒற்றுமையாக உறவாடிக் கொண்டிருக்கும்போது அவற்றிற்கு குந்தகம் விளைவித்து
நாட்டில் நிலவும் சமாதான சூழலை இல்லாதொளிக்கும் செயலாகவே இவ்வினவாத
வெறியர்களின் செயற்பாடுகள் இன்று காணப்படுகின்றன.
இந்த ரமழான் மாதத்தில் விஷேட வணக்க வழிபாடுகளை நிம்மதியாக பள்ளிவாசலில்
செய்துகொள்ள முடியாமல் பரிதவிக்கும் இந்நிலைமையிலிருந்து மஹியங்கனை பிரதேச
மக்கள் விடுபடவும் முஸ்லிம்களின் இந்த அவல நிலை தொடர்பிலும் ஜனாதிபதி உடன்
கவனம் செலுத்தி நோன்பு காலத்தில் மக்கள் நிம்மதியாக பள்ளிவாசல்களில் வணக்க
வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை உடனடியாக திறந்து
வைக்கவும் அதற்கு பாதுகாப்பு வழங்கும் முயற்சியிலும் அப்பிரதேச வாழ்
மக்களின் வணக்க வழிபாடுகளில் ஈடுபட ஆவண செய்வதற்கான நடவடிக்கையினை ஜனாதிபதி
மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 கருத்துகள்: