பாகிஸ்தானின் அபோதாபாத், பின்லேடன் கம்பவுண்ட் மீது அமெரிக்காவின் சீல் படையணி தாக்குதல் நடத்தி அல்-கைதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின்லேடனை ஒழித்ததும் வரிரிஸ்தான் எல்லையுடன் தெற்காசியாவில் அல்-கைதா அமைப்பு முடங்கி விட்டதாக எண்ணிக்கொண்டிருந்த பலருக்கு கடந்த வாரம் அமெரிக்க, ஊடகமொன்றின் தகவல் இடியாய் விழுந்தது.

அல்கைதாவுக்கு எதிராக போர் பிரகடனம் செய்து பட்டிதொட்டியெங்கும் அவ்வமைப்பினரை தேடிவரும் அமெரிக்கா, அதன் தலைநகரான வொஷிங்டனிலிருந்து இயங்கி வரும் சுதந்திர செய்தி வலையமைப்பான டபிள்யூ.என்.டி. செய்தி நிறுவனம் இலங்கையிலும் பங்களாதேஷிலும் அல்-கைதாவின் செயற்பாடுகள் உள்ளதாக வெளியிட்ட செய்தி தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் உள்ளூர் ஊடகங்களில் அச் செய்தி பிரதான தலைப்புச் செய்தியானது.
 

 அச் செய்தியில் அல்-கைதா இயக்கத்தின் கிளை ஒன்று இலங்கையில் இயங்கி வருவதாகவும் அதன் மூலம் குறித்த அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கையில் விரிவுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவோர் அமெரிக்காவால் தீவிரமாக கண்காணிக்கப்படுவதை நாம் அறிந்துள்ளோம். இந்நிலையில் அல் கைதா உறுப்பினர்கள் இலங்கையூடாக அமெரிக்காவுக்குள் நுழைவதாகவும் இதற்கு இலங்கை - பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள அவ்வமைப்பின் கிளைகள் உதவுவதாகவும் டபிள்யூ.என்.டி. செய்திச் சேவையின் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் மரதன் ஓட்டப் பந்தயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட எச்சரிக்கையுடன் கூடிய பரபரப்பு செய்தியானது சந்தர்ப்பத்தால் பலரின் கவனத்தை ஈர்த்தது.

இதனை மிக அழகாக வடிவமைத்திருந்த டபிள்யூ. என்.டி. செய்தி, பொஸ்டன் சம்பவத்துடன் இலங்கையிலும் பங்களாதேஷிலும் உள்ள சில தனி நபர்களுக்கு தொடர்பிருப்பதாக முடிச்சுப் போட்டிருந்தது. எனினும் அந்த தனி நபர்கள் தொடர்பான குறைந்தபட்ச தகவலையேனும் வழங்க அச் செய்தி தவறிவிட்டது.

இலங்கையர்களை அல்-கைதாவுடன் மட்டும் முடிச்சுப் போடுவதனுடன் நிறுத்திக் கொள்ளாது ஈரானின் குத்ஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகிய அமைப்புக்களுடனும் தொடர்பிருப்பதாக ஒரு அண்டப்புழுகையும் கூடவே சேர்த்துக் கொண்டது.

இந்நிலையில் இலங்கையில் அல்-கைதா செயற்படுகின்றதா என பலரும் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தனர்.

ஏனெனில் 30 வருட கால கொடிய யுத்தமொன்றை வெற்றிகரமாக நிறைவு செய்த ஒரு நாட்டில் அதுவும் புலனாய்வுப் பிரிவு செயற்திறனாக உள்ள ஒரு நாட்டில் அந்நாட்டுக்கு தெரியாமல் அதன் எல்லைக்குள்ளேயே அல்கைதா செயற்படுவதா? என பலரும் வியக்கலாயினர்.
அரசு மறுப்பு
இந்நிலையில் குறித்த செய்தி வெளியாகிய அடுத்த நாள், அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இச் செய்தி தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.

இலங்கையில் அல்-கைதாவின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறுவதாக அரசு கருதவில்லையெனவும் அமெரிக்க ஊடகத்தில் வெளியான செய்தியின் உண்மைத் தன்மை பற்றி அறிய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கா தமக்கு எவ்விதமான உத்தியோகபூர்வ தரவுகளையும் அளிக்கவில்லையென இதன் போது தெரிவித்த அமைச்சர், வெளிவிவகார அமைச்சினூடாக அமெரிக்காவை குறித்த விடயம் தொடர்பில் தொடர்பு கொண்ட நிலையில் அமெரிக்கா அதற்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இராணுவத்தின் மறுப்பு
இந்நிலையில் இலங்கையில் அல்-கைதா செயற்படுவதாக ஆதாரம் எதுவும் இன்றி வெளியிடப்படும் செய்திகளை அலட்டிக் கொள்ளத் தேவையில்லையெனவும் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளில் ஒன்றாகவே இதனை தாம் பார்ப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இராணுவத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தமக்கு நன்றாகவே தெரியும் எனக் கூறும் இராணுவ பேச்சாளர் அல்- கைதா இலங்கையில் செயற்படவில்லை என இராணுவம் என்ற ரீதியில் தன்னால் உறுதிப்பட கூற முடியும் என குறிப்பிட்டார்.
புலனாய்வு பிரிவும் மறுப்பு
இவ்வாறானதொரு நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க மிக தொடர்புடைய நாட்டின் புலனாய்வுப் பிரிவின் நிலைப்பாட்டை பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி அறிவித்தார்.

நாட்டில் புலனாய்வுப் பிரிவு நல்ல நிலையிலேயே உள்ளதாகவும் அல்கைதாவின் செயற்பாடுகள் இங்கு இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவு அறிந்திருக்குமென தெரிவித்த அவர் அல்கைதா இலங்கையில் இல்லையென உறுதிப்படக் கூறியதுடன் குறித்த அமெரிக்க செய்தியை முற்றிலும் சோடிக்கப்பட்ட பொய் என வர்ணித்தார்.

இவ்வாறான உத்தியோகபூர்வ அறிக்கைகள் உள்நாட்டில் சில இனவாத, மதவாத பிரசாரங்களையும் அமெரிக்க ஊடகத்தின் அடிப்படையற்ற செய்தியையும் முற்றிலும் பொய்யானது என மீண்டுமொரு முறை உறுதிபடுத்தியது.
இலங்கையில் அல்- கைதா
இலங்கையில் அல்- கைதா உள்ளிட்ட அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் செயற்படுவதாக செய்திகள் வெளியாகின்றமை இது முதன் முறை அல்ல.

2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து 5 மாலைதீவு பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் அல்- கைதாவுடன் தொடர்புடையவர்கள் எனவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அப்போது வெளிவந்திருந்தன.

இதற்கு மேலதிகமாக 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அல்- கைதாவுக்கும் தொடர்பிருப்பதாக ‘‘டைம்ஸ் ஒப் இன்டியா’’ தெரிவித்திருந்தது. அத்துடன் இஸ்லாமிய அமைப்பொன்று சமயம் சாரா இன்னொரு அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பது இது முதன் முறையெனவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவற்றுடன் விக்கி லீக்ஸ் ஊடகம் வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துடனான இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் சம்பாசணைகளிலும் அல் கைதா உள்ளிட்ட விடயங்களை காண முடிந்தது.

அத்துடன் உள்நாட்டில் மேற்குலகின் நிதியில் இயங்கும் கடும் போக்கு பெளத்த அமைப்புக்கள் சிலவும் இலங்கை பாதுகாப்புத்தரப்பின் தகவல்களை மீறி இலங்கையில் அல்-கைதா செயற்படுவதாகவே ஒரு மாயையைத் தோற்றுவிக்க முனைகிறது.

அமெரிக்க ஊடகச் செய்தியும் அதன் நம்பகத்தன்மை தொடர்பான சந்தேகமும்

இலங்கையில் அல்- கைதா செயற்படுவதாக அமெரிக்க ஊடகமான டபிள்யூ.என்.டி. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியினை அத்தளத்தில் பதிந்திருந்தவர் ரீஸா கலீலி என்ற ஈரானியராவார்.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் இவர் அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சி.ஐ.ஏ. (C.I.A) முகவராகவும் உளவாளியாகவும் தொழிற்படுபவர் என அவர் தொடர்பில் தேடும் போது தெரிய வருகிறது.

1980 மற்றும் 90 காலப் பகுதிகளில் ஈரானிய புரட்சிப் படையில் உறுப்பினராக இருந்துள்ள கலீலி அப்போதே அமெரிக்காவின் உளவு முகவராக செயற்பட தொடங்கியுள்ளார்.

மத்திய தர குடும்பத்தை சேர்ந்த இவர் 1970 களில் அமெரிக்காவில் கல்வி கற்றதாகவும் அக் காலப்பகுதியிலேயே சி.ஐ.ஏ. வுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

90 களின் பிற்பட்ட காலப் பகுதியில் ஈரானினிலிருந்து வெளியேறியுள்ள இவர் பல ஐரோப்பிய நாடுகளிலும் உளவாளியாக செயற்பட்டுள்ளதாக தெரிகிறது.

9/ 11 தாக்குதலை தொடர்ந்து சி.ஐ.ஏ. உடன் நெருக்கமான உறவுகளை இவர் பேணுவதாகவும் அறிய முடிகிறது.

எதிர், குறியீட்டு தகவல் பரிமாற்றம், தப்பிக்கும் தந்திரோபாயம், ஏய்ப்பு தொடர்பில் விசேட பயிற்சிகளை கொண்டிருக்கும் இவர் எழுதிய செய்தியிலேயே இலங்கையில் அல்கைதா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு உளவு முகவர் இவ்வாறான ஒரு தகவலை எழுதுவது கொஞ்சம் சிந்திக்க வேண்டியதே. ஏனெனில் அமெரிக்கா இன்னொரு நாட்டில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முன் கூறும் பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களில் அல் கைதாவின் செயற்பாடுகள் அந்நாட்டில் இடம்பெறுவதாக கூறுவதும் ஒன்றாகும்.

இந்நிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட களம் தேடும் அமெரிக்காவுக்கு இலங்கையில் அல்- கைதா செயற்படுவதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் வெளிப்படையானதே.

இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றியபோதே இலங்கையில் அல்கைதா செயற்படுவதாக சந்தேகித்த தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கை வைத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் காய் நகர்த்தும் அமெரிக்காவுக்கு இலங்கைக்குள் காலடி எடுத்து வைப்பதற்கான அடிப்படை பிரசாரமே இந்த அல்-கைதா பிரசாரம். ஈராக், ஆப்கான் உள்ளிட்ட நாடுகளை சிதைத்து அல்-கைதாவை காரணம் கூறி வட ஆபிரிக்காவையும் மத்திய கிழக்கையும் தனது படைகளுக்கு தளங்களாக மாற்றியிருக்கும் அமெரிக்காவுக்கு தெற்காசியாவில் இலங்கையின் அமைவிடத்தில் ஒரு கண்ணுள்ளதை மறுக்க முடியாது!

இதற்காக தற்போதைக்கு அமெரிக்க தூதராக கம்பவுண்ட்டுக்குள் செயற்படுவதாக நம்பப்படும் சி.ஐ.ஏ. உள்ளிட்ட அமெரிக்க உளவு ஏஜண்டுக்களை அல்கைதாவை தேடி நாடளாவிய ரீதியில் செயற்பட வைத்து இறுதியில் இன்னுமொரு ஆப்கானாவாகவோ அல்லது இன்னுமொரு இஸ்ரேலாகவோ இலங்கையைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டம் தீட்டி விட்டது.

நாட்டில் பயங்கரவாதம் தொடர்பிலான அனைத்து செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த சட்டம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் உச்ச நிலையில் உள்ளது. இந்நிலையில் இலங்கையில் அல்- கைதா என்ற அமெரிக்க சார்பு நீலக் கண்ணீரை கண்டு ஏமாற இலங்கை ஒன்றும் அதன் அடிமை நாடல்ல.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts