சென்னை: இன்று காலை முதல் விஸ்வரூபம் படத்தை திரையிட தடை இல்லை என்று
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டாலும், படத்தைக் காண ரசிகர்கள் மேலும்
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு
விதித்த இரண்டு வார தடையை உயர்நீதிமன்றம் நேற்று இரவு ரத்து செய்தது.
படத்தை இன்றுமுதல் திரையிட அனுமதித்தது. ஆனால் தமிழக அரசு இந்த தீர்ப்பை
எதிர்த்து அப்பீல் செய்யப் போகிறது. காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த
அப்பீலை எடுத்துக் கொண்டு விசாரிக்கவிருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதி அடங்கிய பெஞ்ச். இந்த நிலையில் படத்தைக் காண ஏராளமானோர்
திரையரங்குகளின் முன் இன்று காலையிலேயே குவிந்தனர். ஆனால் சிறப்புக்
காட்சிக்கு அனுமதி மறுத்துவிட்டனர் போலீசார். இதனால் எங்குமே காலை
சிறப்புக் காட்சி நடக்கவில்லை. முதல் காட்சி முற்பகல் 11 மணிக்குப்
பிறகுதான் தொடங்கும். அதற்குள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு
தீர்ப்பு கிடைத்துவிடும் என்பதால், தியேட்டர்களும் அரசைப் பகைத்துக் கொள்ள
விரும்பாமல் காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதனை வெளிப்படையாக
சொல்லாமல், போலீஸ் மூலம் தெரிவித்து வருகின்றனர். 11 மணிக்குப் பிறகுதான்
காட்சி நடக்கும். போய் வாருங்கள்... கூட்டம் கூட வேண்டாம் என்று
ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர் போலீசார்.

0 கருத்துகள்: