
கொழும்பு:இலங்கையின்
வவுனியா மற்றும் செட்டிகுளம் பிரதேசங்களில் இந்திய வீட்டுத் திட்டத்தில்
தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி புதன்கிழமை நடத்தப்பட்ட கவன
ஈர்ப்புக் கண்டனப் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளியன்று
வவுனியாவில் முஸ்லிம்கள் பேரணியொன்றை நடத்தினர். வவுனியா மாவட்ட இன
நல்லுறவுக்கான ஒன்றியம் என்ற அமைப்பின் தலைமையில் இப்பேரணி நடைபெற்றது.
வவுனியா நகர மஸ்ஜிதில் இருந்து ஆரம்பமாகிய
இந்தப் பேரணி, வவுனியா செயலகத்தில் சென்று முடிடிவடைந்தது. அங்கு, இலங்கை
அதிபருக்கு எழுதப்பட்ட மனு ஒன்றை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அரசு பிரதிநிதியிடம் ஒப்படைத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
“கடந்த 30-ஆம் தேதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மீள்
குடியமர்ந்தவர்களுக்கான நலன்புரி அமைப்பினால் வவுனியா அரசாங்க அதிபரிடம்
கையளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
செட்டிகுளம், வவுனியா பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை
முழுமையாக நிராகரிக்கின்றோம். கடந்த 1994ம் ஆண்டிற்குப் பின்னர் வவுனியா
மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு 7454 வீடுகளும், முஸ்லிம் மக்களுக்கு 1123
வீடுகளும், சிங்கள மக்களுக்கு 245 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது’ என்று அந்த
மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தில், 11 தமிழ்
கிராமங்களும், 8 சிங்களக் கிராமங்களும், 3 முஸ்லிம் கிராமங்களும் தெரிவு
செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக்
கிராமங்களில் கிராம ரீதியாக எத்தனை வீடுகள் எந்தெந்த சமூகங்களுக்கு
ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
0 கருத்துகள்: