சமுதாயம் பிளவாகும் சூழ்நிலை கமல் விஷ்வரூபத்தை கைவிட
வேண்டும் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
"விஸ்வரூபம் திரைப்
படம்
தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் சமூகச் சிக்கலாக இப்போது உருமாறியிருக்கிறது.
படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகளும், படத்தை
அனுமதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் போன்ற திரைப்படக் கலைஞர்களும் பேசி
வருகின்றனர். இதனால் தமிழ்ச் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தக்கூடிய
ஆபத்து உருவாகியிருக்கிறது. எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாகத்
தலையிட்டு இப்பிரச்சினையில் சுமூகமாகத் தீர்வு காண வேண்டும்.
திரு. கமலஹாசன் அவர்கள் இந்தியாவிலிருக்கின்ற சிறந்த நடிகர்களில் ஒருவர்
என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனால் அவருக்குக் கூடுதல் சமூகப்
பொறுப்பு உள்ளது. திரைப்படத்தின் தாக்கம் எத்தகையது என்பதை நன்கு அறிந்த
அவர், ஒரு திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும்போது வணிக
நோக்கைவிட சமூக நோக்கைக் கூடுதலாகக் கொண்டு உருவாக்க வேண்டும்.

இந்தத் திரைப்படம் இசுலாமிய சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கிறது என்ற
குற்றச்சாட்டை தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநிலங்களிலும்
இருக்கின்ற இசுலாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது கேரளா,
ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநிலங்களிலும் இத்திரைப்படத்திற்கு எதிரான
கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அளவுக்கு பிரச்சனை ஏற்படாமல்
திரு. கமலஹாசன் அவர்கள் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு செய்யாதது நமக்கு
ஏமாற்றமளிக்கிறது.
ஒரு திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ்
வழங்கப்பட்டுவிட்டால் அதனைத் தடுக்கக்கூடாது என நீதிமன்றங்கள் ஏற்கனவே
தீர்ப்பளித்துள்ளன. திரைப்படத்தைப் பொறுத்தவரை தணிக்கைக் குழுவின்
உறுப்பினர்களே நீதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள்.
அவ்வாறிருக்கும்போது, தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமிப்பதில் அரசு
கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிபதிகளை நியமிப்பதற்கு எத்தகைய
கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ, அத்தகைய கவனம் தணிக்கைக்குழு
உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் காட்டப்பட வேண்டும். அரசியல்
கட்சிகளைச் சேர்ந்தவர்களை தணிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிப்பதை அரசு
கைவிட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள்,
பெண்கள் உள்ளிட்ட சமூகத்தில் நலிந்த பிரிவினரை திரைப்படங்களில் எதிராகச்
சித்தரிப்பதால் சமூகத்தில் மிக மோசமான கருத்து பரவுகிறது. இருப்பதிலேயே
மிக வலிமையான ஊடகமாக இருக்கும் திரைப்படம் குறித்து ஆட்சியாளர்கள் கூடுதல்
கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதையே விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான
சிக்கல் நமக்கு உணர்த்துகிறது.
டெல்லியில் நடைபெற்ற பாலியல்
வன்கொடுமையை முன்வைத்து பெண்கள் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தம்
செய்யப்படுவது போலவே 'விஸ்வரூபம்' திரைப்படப் பிரச்சனையை முன்வைத்து
திரைப்படத் தணிக்கைக் குழுவைச் சீரமைப்பதற்கு அரசு முன்வரவேண்டும் என்று
விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது."
மேற்கண்டவாறு திருமா வளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்: