முல்லைத்தீவு, கொத்தியாகும்பம் கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெற்ற காணிக்கச்சேரியில் தீர்மானிக்கப்பட்டபடி 77 பேருக்கு தலா அரை ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட காணிக்கு உறுதிப்பத்திரங்களை விரைவில் உரியவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டச்செயலாளரும், பிரதேச செயலாளரும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இம் மாத ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்கு மாவட்டச் செயலாளர் என் வேதநாயகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குகதாசன் ஆகியோர் உட்பட ஏனைய உயர் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி மீளாய்வு செய்யும் முகமாக திங்கள் கிழமை (20) கொழும்பு, தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் ஹக்கீமுடன் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉயர் பீட உறுப்பினருமான எம்.எச்.எம். நஜாதின் தலைமையில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பங்குபற்றினர்.



சர்ச்சைக்குரிய முள்ளியவளை விவகாரத்தில், சொந்தக் காணியற்றவர்களுக்கு காணிகளை சுமூகமாகவும், நல்லிணக்கத்தோடும் பகிர்ந்தளிப்பது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஏற்பட்ட அசையும், அசையா ஆதனங்களில் ஏற்பட்ட அழிவுகள் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு அவற்றிற்கான இழப்பீடுகளை இயன்றவரை துரிதமாக பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் ஆகியோர் கரிசனை செலுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

ஹிஜ்ராபுரம் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட 2 ஏக்கர் காணியில் சுனாமியால் பாதிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வேறு இடத்தில் மாற்றுக் காணிகளை வழங்குவதோடு, இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு ஓரளவு காலதாமதம் ஏற்படலாம் என மாவட்டச் செயலாளரும், பிரதேச செயலாளரும் அங்கு நேரில் சென்றிருந்த அமைச்சர் ஹக்கீமிடம் குறிப்பிட்டிருந்தனர்.

தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிலவும் இடநெருக்கடியை போக்குவதற்கு பாடசாலைக்குரிய காணியில் குடியிருப்பவர்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதன் மூலம் தீர்வு காணப்பட உள்ளதாகவும், பாடசாலையின் பௌதீக, மனித வள குறைபாடுகள் பற்றியும் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சிலாவத்தை மத்ரஸாவுக்குரிய 26 ஏக்கர் நிலப்பரப்பின் முன்பகுதியில் ஒருவர் அத்துமீறி குடியேறி அதில் நிரந்தர வீடமைத்து வசித்து வருவது பற்றி சுட்டிக்காட்டப்பட்டபொழுது அந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் இருப்பதோடு, அக் காணி வக்பு செய்யப்பட்டிருப்பதால் வக்பு சபையின் ஊடாக அதனை மீள பெற்றுக்கொள்வதற்குரிய வழிவகைகள், மற்றும் சட்டம் சம்பந்தமான விடயங்களும் ஆராயப்பட்டது.

நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கும் நீராவிப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச்சங்க வீதியை நெல்சிப் திட்டத்தின் கீழ் செப்பனிடுவது தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயம் பற்றியும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி எல்லைமீள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில், முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட முஸ்லிம் கிராம வட்டாரங்களை பல் அங்கத்தவர் வட்டாரமாக ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட, பிரதேச செயலாளர்கள் முன்மொழிவுகளை செய்த போதும், இரண்டு தனித்தனி வட்டாரங்களை அமைப்பதன் முக்கியத்துவம் பற்றியும் மூன்றாவது வட்டாரமொன்றின் தேவை பற்றியும் அமைச்சர் தனது கருத்துக்களை முன்வைத்ததது குறிப்பிடத்தக்கதாகும்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு நீதியமைச்சின் கீழ் செயல்படும் மத்தியஸ்த சபையொன்றை புதிதாக அமைப்பதற்கு அமைச்சர் ஹக்கீமிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts