இது பிரித்தானியாவுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல இஸ்லாத்துக்கும் எதிரான தாக்குதலாகும் :பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன்
லண்டனின் வூல்விச் பிராந்தியத்தில் இளம் படை வீரர் ஒருவர் இரு இனவாத நைஜீரிய வம்சாவளி பிரித்தானியர்களால் கழுத்தை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே அந்நாட்டில் புகைந்து கொண்டிருந்த இனவாத பகைமைக்கு தூபம் இடுவதாக இந்த தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளது.


ஆங்கிலேய பாதுகாப்பு அமைப்பு என தம்மைத்தானே அழைத்துக் கொள்ளும் அமைப்பினர் மேற்படி படை வீரர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வியாழக்கிழமை வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


இதன்போது கலகத்தடுப்பு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. வூல்விச் எஸெக்ஸிலுள்ள பிறைன்றீ கென்ட்டிலுள்ள கில்லிங்ஹாம் ஆகிய இடங்களிலுள்ள பள்ளிவாசல்கள் மீது கற்களையும் போத்தல்களையும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் லண்டனில் நிலவும் பதற்ற நிலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவர்களையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


மேற்படி வன்முறைகளையடுத்து லண்டனிலான பாதுகாப்பைப்பலப்படுத்த மேலதிகமாக 1200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வூல்விச்சிக் இடம்பெற்ற சம்பவம் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர் டேவிட் கமெரோன் அமைதியை பேண மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


பிரித்தானிய படை வீரர் கொடூரமான முறையில் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டதும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு சென்றிருந்த டெவிட் கெமருன் தனது நிகழ்ச்சிகளை உடனடியாக ஒத்தி வைத்து விட்டு நாடு திரும்பினார்.


நாடு திரும்பிய அவர் உயர் மட்ட அவரசகால கூட்டமொன்றை கூட்டி நிலைமை குறித்து ஆராய்ந்தார். இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக இராணுவ முகாம்கள், இராணுவ கட்டிடங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் கூடும் இடங்கள் என்பனவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


படை வீரர் படுகொலை செய்யப்பட்டது ஒரு பயங்கரவாத தாக்குதல் என டேவிட் கமெரோன் தெரிவித்திருந்தார். லண்டனில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் லண்டனிலுள்ள பள்ளிவாசலொன்றுக்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர் பழிவாங்கும் நடவடிக்கையாக வன்முறைகளில் ஈடுபடுவதற்கு திட்டமிட்ட ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதை செய்தவர்கள் எம்மை பிரிவுபடுத்த முயற்சித்துள்ளார்கள். இதுபோன்ற ஒன்று எம்மை ஒன்றுபடுத்தவும் மேலும் பலப்படுத்தவும் மட்டுமே செய்யும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத்தெரிவித்த கமெரோன் தாக்குதல் பிரித்தானியாவுக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்லாத்துக்கும் எதிரானதாகும் என்று கூறினார்.


இது பிரித்தானியாவுக்கும் பிரித்தானிய வாழ்க்கை முறைக்கும் மட்டும் எதிரான தாக்குதல் அல்ல இது இஸ்லாத்துக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யும் தாக்குதலாகவுள்ளது. இத்தகைய கொடூரமான நடவடிக்கையை இஸ்லாம் நியாயஸ்தம் செய்யவில்லை. நாங்கள் ஒன்றுபட்டு நிற்பதன் மூலம் வன்முறை மிக்க தீவிரவாதத்தை தோற்கடிப்போம் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.


தொடர்ந்த கமெரோன் வூல்விச்சிற்கு விஜயம் செய்து வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.


வூல்விச் பிராந்தியத்திலுள்ள இராணுவ முகாம் முன்பாக முழு இராணுவ சீருடையில் காரில் சென்று கொண்டிருந்த டிரம்பர் லீ றிக்பி என்ற மேற்படி படை வீரர் தெருவில் சென்ற இளைஞர்கள் இருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.


தெருவில் பலர் சென்றுகொண்டிருந்த நிலையில் எதற்காக மேற்படி இளைஞர்கள் இருவரும் தனது காரை வழிமறிக்கிறார்கள் என்பது புரியாத நிலையில் படை வீரர் தனது காரை நிறுத்தியுள்ளார்.


அவர் இளைஞர்களிடம் என்ன விடயம் என வினவ ஆரம்பித்த போது இளைஞர்கள் அவரை காரிலிருந்து வெளியே இழுத்து நிலத்தில் தள்ளி அவரது கழுத்தை கத்தியால் வெட்டி அவரைக் கொன்றனர்.


அந்தப்படுகொலை காட்சியை நேரில் கண்ட அவ்வழியாக சென்ற பலர் அது ஏதோ சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என ஆரம்பத்தில் நினைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் படை வீரரின் கழுத்திலிருந்து குருதி பெருக்கெடுத்தோடுவதை கண்டதும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேற்படி படை வீரர் கழுத்து வெட்டப்பட்டு வீதியில் கிடப்பதை அவ்வழியாக சென்ற பஸ்ஸொன்றிலிருந்து அவதானித்த இங்றித் லயாயு கென்னட் (48 வயது) என்ற பெண் மேற்படி படை வீரர் விபத்துக்குள்ளாகி வீதியில் கிடப்பதாக நினைத்து பஸ்ஸிலிருந்து இறங்கிய அவருக்கு உதவச் சென்றுள்ளார். ஆங்கில ஆசிரியையான இங்றித் லயாயு கென்டை முதலுதவி பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட படை வீரருக்கு முதலுதவி சிகிச்சையை வழங்குவதில் ஈடுபட்டார்.

இதன் போது தன்னருகே துப்பாக்கி மற்றும் கத்தியுடன் நபரொருவர் நிற்பதை அவர் கண்டார். அவன் படை வீரரை தொட வேண்டாம் என என்னை எச்சரித்தான். நான் ஏனென வினவிய போது, அவன் ஒரு பிரித்தானிய படை வீரன். அவன் மக்களை கொன்றுள்ளான். அவன் முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம் மக்களை கொன்றுள்ளான் என அவன் (ஆயுததாரி) கூறினான் என்று தெரிவித்தார். குண்டுகள் போடப்பட்டு கண்மூடித்தனமாக பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டுவருகின்றனர் என அந்த ஆயுததாரி தெரிவித்ததாக இங்றித் கூறினார்.


இதனையடுத்து ஆயுததாரியின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் தொடர்ந்து அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்தார் என இங்றிட் தெரிவித்தார். தான் துப்பாக்கிதாரியை கண்டு சிறிதும் அஞ்சவில்லை என இங்றித் கூறினார். குறிப்பிட்ட படை வீரர் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டு அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த ஒருவர் எனவும் அதற்கு பழிவாங்கவே தான் அவனைக் கொன்றதாகவும் ஆயுததாரி இங்றித்திடம் தெரிவித்துள்ளார். எனது நாட்டில் போர் நடந்து கொண்டிருக்கிறது.

அதற்காகவே லண்டனில் போரிடுவதாக தெரிவித்த ஆயுததாரி அவ்விடத்தில் பொலிஸார் வரும் பட்சத்தில் அவர்களையும் கொல்லப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். இங்றித் ஆயுததாரியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அவரையும் அவருடனிருந்த பிறிதொரு ஆயுததாரியையும் அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிதாரிகள் தம்மை சுற்றிவளைத்தவர்களை சுட்டுவிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர். எனினும் தக்க தருணத்தில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இரு ஆயுததாரிகளின் கால்களிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காலில் குருதி பெருக்கெடுத்தோட தப்பிச் செல்ல முயன்ற ஆயுததாரிகள் இருவரையும் மடக்கிப் பிடித்த பொலிஸார் அவர்களை கைது செய்து பொலிஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.


இரு ஆயுததாரிகளும் தற்போது அவர்களது கால்களிலுள்ள துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அபாயகரமான நிலையில் துணிகரமாக செயற்பட்டு மேலும் பல உயிரிழப்புகள் இடம்பெறாது தடுத்த இங்றித்திற்கு அதிகாரிகளும் மக்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள்
தாக்குதலை நடத்திய ஆயுததாரிகளில் ஒருவர் மைக்கேல் அடெபோலஜோ (28வயது) என இனங்காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்தவராவார்.


அவரும் அவரோடு இணைந்து தாக்குதலை நடத்தியவர்களும் தீவிர கிறிஸ்தவர்களாக இருந்து அண்மையில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டவர்களாவர்.
சந்தேக நபர் கிறீன்விச் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான பெயர் வெளியிடப்படாத இரண்டாவது ஆயுததாரி சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ளூர் வாசிகளின் ஆதரவைத் திரட்டி துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


வூல்விச்சிலுள்ள ஆயுததாரியொருவரது வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அவரது காதலியையும் பிறிதொரு நபரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இறந்த படை வீரர்
இறந்த படை வீரர் பிரித்தானிய யுஸிலியர்ஸ் றோயல் ரெஜிமென்ட் படையணியைச் சேர்ந்த டிரம்பர் லீ றிக்பியே (25 வயது) மேற்படி தாக்குதலில் பலியாகியுள்ளார்.
மான்செஸ்டரில் வசிக்கும் அவருக்கு இரண்டு வயது மகன் ஒருவர் உள்ளார்.


2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலொன்றையடுத்து பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதலொன்று இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts