(இம்மாம்) ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள் ஹஜ்ஜு செய்யச் சென்றபோது, கஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்தபோது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்க கஅபா சென்றுவிட்டதாகத் தெரிந்ததாம்.

இது கதை சுருக்கம்.
இந்தக் கதை பல வகைகளில் விரிவுபடுத்தப்பட்டு பல விதமாகச் சொல்லப்படுகின்றது.

"இந்தக் கதை சரியானது தானா?" என்று நாம் ஆராய்வோம்!
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜு செய்வதற்காக ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு மக்காவுக்குத் தம் தோழர்களுடன் புறப்பட்டனர். ஹுதைபியா என்ற இடத்தில் வைத்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள் !

கஃபதுல்லாவை சந்திக்க வேண்டும் என்ற பேராசையில் நபி (ஸல்) அவர்களும் , அவர்களின் தோழர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் மக்கத்துக் காபிர்கள் தடுத்துவிட்டனர்.

கஃபதுல்லா எவருக்காகவும் நடந்து வரக் கூடியதாக இருந்தால், இந்த இக்கட்டான நிலையில் நபி (ஸல்) அவர்களைத் தடுத்தபோது அவர்களை நோக்கி வந்திருக்க வேண்டுமே?
அல்லாஹ்வின் திருத்தூதருக்காக இடம் பெயர்ந்து வராத கஅபா, ராபியதுல் பசரிய்யா என்ற பெண்ணை வரவேற்பதற்காக வந்தது என்றால் அதுவும் எவ்வித அவசியமும் இல்லாமல் அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எவராவது ஏற்க இயலுமா? எண்ணிப் பாருங்கள்!

அதன்பின் இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களின் ஆருயிர்த் தோழர்களும் மக்காவுக்குச் சென்றபோது மக்காவின் எல்லையில் நபி (ஸல்) அவர்களையும் , அவர்களின் தோழர்களையும் வரவேற்க கஃபதுல்லா மக்காவின் எல்லைக்கு இடம் பெயர்ந்து வரவில்லை!

ஒருவரை வரவேற்பதற்காக கஃபதுல்லா இடம் பெயர்ந்து வருமென்றால் அல்லாஹ்வின் தூதர் அல்லவா வரவேற்கப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் !

அதன்பின் நாற்பெரும் கலீபாக்கள், ஸஹாபக்கள், தாபியீங்கள், நாற்பெரும் இமாம்களெல்லாம் ஹஜ்ஜு செய்ய வந்திருக்கின்றார்கள்! அவர்களை எல்லாம் வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்து வரவில்லையே?
திருக்குர்ஆன் வசனங்களும் இந்தக்கதை பொய்யானது என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

கஃபதுல்லாவை இப்ராஹீம் (அலை) இஸ்மாயில் (அலை) இருவரும் கட்டி முடித்தபோது அவர்களிடம் கஃபதுல்லாவின் நோக்கம் என்ன என்பதை அல்லாஹ் தெளிவாகச் சொல்கிறான். எவரையும் வரவேற்க இடம் பெயர்ந்து செல்வதை அதன் நோக்கங்களில் ஒன்றாக ஆக்கவில்லை.

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.
அல்குர் ஆன் 2 : 125

கஃபதுல்லாஹ்வை நோக்கி மக்கள் வரும்போது மக்களின் ஒதுங்குமிடமாக அதை அல்லாஹ் ஆக்கியுள்ளதாகக் கூறுகிறான். கஃபதுல்லாவைத் தேடி மக்கள் செல்லும்போது,ச்"அது அங்கே இல்லையானால் "மக்களுக்கு சிறிது நேரம் அது ஒதுங்குமிடமாக இல்லாமல் போகின்றதே! அல்லாஹ்வின் உத்தரவாதத்தைப் பொய்யாக்கக் கூடிய இந்த கதையை எவராவது இயலுமா ?
தவாபு செய்பவர்கள், அங்கே தொழ வருபவர்கள், தியானிப்பவர்கள் ஆகியோருக்காகவே கஃபதுல்லா நிர்மாணிக்கப்பட்டது என்று அதன் நோக்கத்தையும்
அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.

ஆனால் இந்தக் கதையின் படி திக்ரு செய்வதற்காகவும், தவாபு செய்வதற்காகவும் , தொழுவதற்காகவும் அங்கே சென்ற ஹஸன் பஸரீ (ரலி) அவர்களுக்காகவும், அவர்களைப் போன்ற பல்லாயிரம் மக்களுக்காகவும் கஃபத்துல்லா அங்கே இருக்கவில்லை. அதாவது எந்த நோக்கத்திற்காக கஃபாவை அல்லாஹ் நிர்மாணிக்க செய்தானோ அந்த நோக்கத்திற்காக 'கஃபா' அங்கே இல்லை என்று இந்தக் கதை உணர்த்துகின்றதே!

இது எப்படி உண்மையாக இருக்க முடியும் ?

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
அல்குர் ஆன் 3 : 96

இந்தத் திருவசனம் கஃபத்துல்லா மனிதர்கள் இறைவனை வணங்குவதற்கென ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருப்பதையும், கஃபா மக்கள் அனைவருக்கும் பொதுவானது எந்தத் தனி நபருக்கும் விஷேச மரியாதை செய்ய நடந்துவராது என்பதையும் உணர்த்துகின்றது.

மக்கள் அனைவருக்கும் நேர்வழியாக இருக்கின்ற - மக்கள் அனைவருக்கும் பரக்கத்து நிறைந்ததாகவும் இருக்கின்ற கஃபதுல்லாவைத்தான் மக்கள் தேடிச் செல்ல வேண்டும் என்பதை நமக்கு விளக்குகின்றது. இந்தக் கதையின்படி " பரக்கத்தைப் பெறுவதற்காக அதைத் தேடிச் சென்றுள்ள மக்களுக்காக காட்சி தரவில்லை என்றால், " குர் ஆனின் உத்தரவாதம் இங்கே பொய்யாக்கப்படுகின்றது.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவைகளற்றவன்.
அல்குர் ஆன் 3 : 97

பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கின்ற மக்கள் அவ்வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக ஆக்கிவிட்டு , அந்தக் கடமையை நிறைவேற்ற அவ்வீட்டைத் தேடி வருகின்ற மக்களுக்காக அந்த இடத்தில் அல்லாஹ் வைக்காமலிருப்பானா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் .

அவ்வீடு எவரையும் தேடி வராது என்பதையும் இந்தத்
திருவசனம் உணர்த்துவதை நாம் காணலாம்.
இந்த கதை திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுகின்றது. அல்லாஹ்வின் நோக்கத்தையும் , அவனது உத்தரவாதத்தையும் பொய்ப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் கூற்றுக்கு முரணாக இருக்கும்
இந்தக் கதை எப்படி உண்மையாக இருக்க இயலும் ?
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பின்வரும் இறைவசனம் மிகவும் தெளிவாகவே இந்தக் கதையைப் பொய்யாக்கி விடுகின்றது.


புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், குர்பானிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.

வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிவதற்காகவே இது (கூறப்படுகிறது.)
அல்குர்ஆன் 5 : 97

இந்தத் திருவசனத்தில் "கியாமன் லின்னாஸ்" மக்களுக்கு நிலையான தலமாக ஆக்கிவிட்டதாக அல்லாஹ் ஆணி அடித்தாற்போல் சொல்லி விருகிறான். மனிதர்களுக்காக அது இருந்த இடத்தில் நிலையாகவே இருக்கும், இடையில் இடம் பெயர்ந்து செல்லாது என்பதை மிகவும் தெளிவாகவே அல்லாஹ் சொல்லி விடுகிறான்.

இந்தக் கதை பொய்யானது; ஒரு முஸ்லிம் இதை நம்பக்கூடாது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் ?
மனிதர்களை உயர்த்துவதற்காக அவர்களின் மரணத்திற்குப்பின் பல கதைகள் கட்டிவிடப்படுவது வாடிக்கையாகவே நடந்து வருவதாகும்.

ஆனால் ராபி ஆ பஸரிய்யா (ரஹ்) அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே இதுபோன்ற கதைகள் கட்டிவிடப்பட்டன . இதை செவியுற்ற ராபி ஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் , இவற்றைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்!
இவை ஷைத்தான் மக்களுடன் விளையாடுகிறான் என்று கூறிவிட்டர்கள்.

இந்தக் கதையின் நாயகியாகிய அவர்களே திட்டவட்டமாக இது போன்ற கதைகளை மறுத்துள்ளது இந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான சான்றாகத் திகழ்கின்றது.

ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இப்படி மறுத்துள்ளதை ஸனதுடன் இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது ' தல்பீஸு இப்லீஸ் ' என்ற நூலில் 383 ஆம் பக்கத்தில்
பதிவு செய்துள்ளனர்.

திருக்குர்ஆனுடன் மோதும் இது போன்ற கதைகளை நம்புவதும், பேசுவதும், குர்ஆனையே மறுப்பதாகும் . இது போன்ற பொய்களை நம்புவதைவிட்டும் அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக !

குறிப்பு : நாம் கதைகளின் பின்னணியில் ' என்ற தொடரில் அடையாளம் காட்டி வருகின்ற கதைகள் இந்தக் கிதாபில் உள்ளது ! அந்தக் கிதாபில் உள்ளது ! என்று சில ஆலிம்கள் பெரிய மறுப்பு என்று எண்ணிக்கொண்டு எழுதி வருகின்றனர்.

நாம் அந்த நூல்களில் அந்தக் கதைகளைப் பார்த்துவிட்டுத்தான் , அது குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டுள்ளதைக் காட்டுகிறோம். குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக எந்த கிதாபில் இருந்தாலும், அதை எந்த முஸ்லிமும் ஏற்க முடியாது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts