வாஷிங்டன்:அமெரிக்காவின்
ஒஹையோ மாநிலத்தின் க்ளீவ்லண்ட் நகரில் தனது வீட்டில் மூன்று இளம்
பெண்களைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அவர்களை ஒன்பது அல்லது
அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் குற்றம்
சாட்டப்பட்டிருக்கும் ஏரீயல் கேஸ்ட்ரோ முதன்முறையாக நீதிமன்றத்தில்
ஆஜரானார். மூன்று பெண்களைக்
கடத்தியது மற்றும் அவர்கள் தனது கட்டுப்பாட்டில் இருக்கையில், ஒரு
பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையையும் கடத்தியது ஆகிய நான்கு கடத்தல்
குற்றச்சாட்டுகளையும், மூன்று பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளையும் இந்த
52 வயதான, முன்னாள் பள்ளிக்கூட பேருந்து ஓட்டுநர் எதிர்கொள்கிறார்.
நிரம்பிவழிந்த நீதிமன்ற அறையில் சிறிது நேரமே இருந்த கேஸ்ட்ரோ, நீல நிற
மேல் சட்டை அணிந்திருந்தார். அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்
குறித்து எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற விசாரணைகள்
நடந்த ஐந்து நிமிடங்களில் அவர் தரையைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிரிமினல் குற்றச்சாட்டுக்கும்
அவருக்கு இரண்டு மிலியன் டாலர்கள் பிணைத் தொகையை நீதிபதி நிர்ணயித்தார்.
0 கருத்துகள்: