
நிபந்தனை அடிப்படையில் இவர் விடுதலை
செய்யப்பட்டதாக அசாத் சாலியின் உறவினர் ஒருவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்ட அசாத் சாலி தற்போது கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசாத் சாலி தனது விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் அதனை அடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அசாத் சாலி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தான் சென்னையில் செய்தது தவறு என ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியாவின் சஞ்சிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் அசாத் சாலி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2ம் திகதி காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அசாத் சாலி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்தார்.
அசாத் சாலி மீது நிதி மோசடி உள்ளிட்ட மேலும் 18 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தமிழ்நாட்டில் உள்ள புலி ஆதரவு தரப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹுலுகல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அசாத் சாலியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தனர். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புக்கள் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தின.
அசாத் சாலியின் விடுதலை கோரி நேற்று கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
மேலும் அசாத் சாலி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவும் இன்று நீதமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் 28ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அத தெரண - தமிழ்)
0 கருத்துகள்: