காரைக்காலில்
ஆசிட் வீச்சில் இறந்த பொறியியல் பட்டதாரி விநோதினி (23) கொலை வழக்கில்
குற்றவாளி சுரேஷுக்கு (27) ஆயுள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால்
கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
காரைக்கால் எம்.எம்.ஜி. நகரைச் சேர்ந்த ஜெயபால் மகள் விநோதினி. இவர் மீது
ஒருதலைக் காதல் கொண்ட திருவேட்டக்குடியைச் சேர்ந்த அப்பு (எ) சுரேஷ்
என்பவர், கடந்தாண்டு நவம்பர் 14-ம் தேதி விநோதினி மீது ஆசிட் வீசினார்.
காரைக்கால் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை மருத்துவமனையிலும்
அனுமதிக்கப்பட்ட விநோதினி, கடந்த பிப்ரவரி 12-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, சுரேஷை காரைக்கால் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு
விசாரணை காரைக்கால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை அண்மையில் நிறைவடைந்தது.
தீர்ப்பை நீதிபதி என்.வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். தீர்ப்பு விவரம்:
விநோதினி மீது ஆசிட் வீசியதற்காக சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும்,
விநோதினியின் தந்தை ஜெயபால், விநோதினியின் நண்பர் பத்மநாபன் ஆகியோர் மீது
அமிலம் வீசிய குற்றத்துக்காக கூடுதலாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்
விதிக்கப்படுகிறது. இவற்றை சுரேஷ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
மேலும், ரூ. 1 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும். இதில் ரூ. 50 ஆயிரத்தை
விநோதினியின் குடும்பத்தினரிடம் அளிக்க வேண்டும் என நீதிபதி
தீர்ப்பளித்தார்.
எனது மகளுக்கு ஏற்பட்ட துயரச் சம்பவம் வேறு
யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. குற்றவாளிக்கு சரியான தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் போலீஸார் பணியாற்றிய விதம் பாராட்டுக்குரியது.
எதிரிக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என விநோதினி மருத்துவமனையில்
கூறிக் கொண்டிருந்தார். அது கிடைத்துள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையும்
என்றார்.
0 கருத்துகள்: