சிரியாவின்
பிரஜைகளில் இருபது லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது அகதியாக தம்மைப்
பதிந்துகொண்டுள்ளனர் என்றும், கடந்த ஆறு மாதத்தில் இந்த எண்ணிக்கை பத்து
லட்சத்தால் அதிகரித்துள்ளது என்றும் அகதிகள் நலனுக்கான ஐநா நிறுவனம்
கூறுகிறது.
உலகிலே தற்போது மிக அதிகமான மக்கள் இடம்பெயர நேர்ந்துள்ள ஒரு நாடு சிரியா என யு என் ஹெச் சி ஆர் கூறுகிறது.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என தொடர்ந்து மக்கள் சிரியாவின் எல்லையை
கடந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், ஒன்றிரண்டு மாற்றுடைகளைத்
தவிர வேறெதையும் பெரிதாக எடுத்துச் செல்ல முடியாத ஒரு கஷ்டத்தில் இவர்கள்
இருக்கிறார்கள் என்றும் யு என் ஹெச் சி ஆர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள
அறிக்கை ஒன்று கூறுகிறது.
இவ்வாறாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய
அவல நிலைக்குள்ளாகும் மக்களில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறார்
எனவும் இந்தச் சிறார்களில் முக்கால்வாசிப்பேர் பதினோரு வயதுக்கும்
குறைவானவர்கள் என ஐநா உதவியமைப்புகள் மதிப்பிடுகின்றன.
சிரியாவை
விட்டு வெளியேறிய அகதிச் சிறார்களில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம்
பேருக்கு மட்டுமே ஏதோ ஒரு வகையில் கல்வி வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும்
இவர்களில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு மட்டுமே உளவியல் ரீதியான
ஆற்றுப்படுத்தல் சேவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
லெபெனான், ஜோர்டான், துருக்கி, இராக், எகிப்து போன்ற சிரியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு மக்கள் வெளியேறியுள்ளனர்.
லெபனானில் ஏழு லட்சம் பேர், ஜோர்டானில் ஐந்து லட்சம் பேர், துருக்கியில் நாலரை லட்சம் பேர் என சிரியன் அகதிகள் தங்கியுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு வெளியேறியவர்கள் எண்ணிக்கை இருபது லட்சத்தை தாண்டியுள்ளது
என்றால், அதைவிட இரண்டு மடங்கு அதிமானதொரு எண்ணிக்கையில்
உள்நாட்டுக்குள்ளேயே சிரியன் மக்கள் அகதிகளாக வாழ்ந்துவருகின்ற அவலம்
காணப்படுகிறது.
அகதிகள் எண்ணிக்கை மிகவும் அதிகமான இருப்பதால்,
அவர்களுக்கு உதவிகள் வழங்க சர்வதேச தொண்டு நிறுவனங்கள் திணறி வருவதாகவும்,
இவர்களின் அடிப்படையான தேவைகளை மட்டுமாக நிறைவேற்றுவதற்கு தேவைப்படும்
தொகையில் பாதிக்கும் குறைவாகவே தங்களிடம் இருப்பதாகவும் ஐநா அகதிகள் நலன்
நிறுவனம் கூறுகிறது.
சிரியாவின் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்து
முதல் இரண்டு வருட காலத்தில் சுமார் 10 லட்சம் பேர்தான் அகதிகளாக
வெளிநாடுகளுக்கு வெளியேறியிருந்தனர். ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் மேலும்
பத்து லட்சம் பேர் வெளியாகியிருப்பது அந்நாட்டில் மோதல்கள் எந்த அளவுக்கு
தீவிரம் அடைந்துள்ளன என்பதை எடுத்துசொல்வதாக இருக்கிறது என்றும் அகதிகள்
நலனுக்கான ஐநா ஆணையாளர் அண்டோண்டியோ குட்டெரெஸ் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்: