முஸ்லிம்களின்
தாயகப் பிரதேசமான வடக்கிலிருந்து புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான
முஸ்லிம்கள் மீண்டும் அங்கு மீளக்குடியமர அனைத்து உரிமைகளும் உண்டு. இதனை
சர்வதே சமூகமும், தற்போதைய அரசாங்கமும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் காணிகளை
ஆக்கிரமித்து அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அவ்விடங்களை வழங்கி வருவதாக
பொதுபல சேனா குற்றம் சுமத்துவது தொடர்பில் அவர்களுடன் பகிரங்க
விவாதத்திற்கு தயாரென அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சூளுரைத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் றிசாத் மேலும் தெரிவித்திருப்பதாவது,
வடக்கு முஸ்லிம்கள் இன்னும் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படவில்லை.
முஸ்லிம்கள் அங்கு மீள்குடியேற உரித்துடையவர்கள். புலிகளினால்
அகதியாக்கப்பட்டவன், அந்த மாவட்டத்தின் பிரதிநிதி, அந்த மாவட்ட மக்கள்
எனக்கு வாக்களித்துள்ளனர் என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடன்
கூறுகிறேன் வடக்கு முஸ்லிம்களையும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
அரசியல்வாதிகள் தொடர்பிலும் பொதுபல சேனா வெளியிட்டுள்ள கூற்றுக்களை
கண்டிக்கிறேன்.
அவர்கள் அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர். முஸ்லிம்களையும், தமிழர்களையும், முஸ்லிம்களையும்,
கிறிஸ்த்தவர்களையும் மோதவிட்டு, தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான
நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவே பொதுபல சேனா இப்போது புதுக்கதை
சொல்லியுள்ளது.
தேசிய விவகாரங்களிலும், நெருக்கடிகளிலும் தற்போது
முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளனர். தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல்
பேதங்களை மறந்து கைகோர்த்துள்ளனர். இந்நிலையில் பொதுபல சேனா மிகத்தந்திரமாக
இந்த ஒற்றுமையை குலைக்க முயலுகிறது. வடக்கில் முஸ்லிம்களுடன் ஏனைய
சமூகங்களை மோதவிட்டு நாடு பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை
தீவிரப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கலாம்.
பொதுபல சேனாவின்
குற்றச்சாட்டுக்களுக்கு மிக தெளிவான விளக்கத்தை வழங்க தயாராகவுள்ளேன். ஆம்,
அவர்களை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறேன். இறைவன் துணையுடனும், முஸ்லிம்
சமூகத்தின் ஆதரவுடனும் இந்த விவாதத்தை எதிர்கொள்ள தயார்.
ஜனாதிபதி செயலணி ஆணையாளர் திவாரத்தினா கூட, வடக்கில் முஸ்லிம்கள்
மீளக்குடியமர காணிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். வடக்கு
முஸ்லிம்களின் காணிகளை பாசிசப் புலிகள் களவாடி தமிழ் மக்களுக்கு
விற்றுவிட்டனர். இப்போது முஸ்லிம்கள் மீளக்குடியமர காணிகள் இல்லை.
அவர்களுக்கான காணிகளை அரசாங்கமே வழங்கிவருகிறது. அதற்கு அரசாங்கமே
பொறுப்பாகவும் உள்ளது.
எந்தவொரு பொதுமகனின் காணியையும்
களவாடி அதில் வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தவில்லை என்பதை சகல
தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும். இதைவிடுத்து வடக்கில் அடிப்படைவாதிகள்
மீள்குடியமர்த்தப்படுகிறார்கள்,
அதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் உதவுகிறார்கள் என்று கூறுவதெல்லாம்
சுத்தப்பொய். பொதுபலசேனாவின் இந்த நிலைப்பாட்டை சமாதானத்தை விரும்பும், இன
ஐக்கியத்தை நேசிக்கும் சகல தரப்புகளும் கணடிக்க வேண்டுமெனவும் அமைச்சர்
றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்,
0 கருத்துகள்: