அமெரிக்காவின்
தலைமையில் பன்னாட்டுப்படையினர் ஈராக்கில் நடத்திய போரில் கடுமையான மனித
உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரின் போது பாக்தாதில் உள்ள ரகசிய சிறைகளில் பணியாற்றிய பிரிட்டீஷ்
ராணுவத்தினர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரிட்டனின் தரைப்படை,
விமானப்படையைச் சார்ந்த ராணுவத்தினர் எழுதிய கட்டுரையை கார்டியன் பத்திரிகை
வெளியிட்டுள்ளது. காவல்-போக்குவரத்து பொறுப்புக்கள் பாக்தாதில்
அமெரிக்காவின் ரகசிய சிறைகளில் பிரிட்டன் ராணுவத்தினருக்கு
வழங்கப்பட்டிருந்தன.
கேம்ப் நமா என்பது ரகசிய சிறையின் பெயராகும்.
கேம்ப் நமாவில் ஒருவரின் செயற்கை காலை வலுக்கட்டாயமாக கழற்றி அதனைக்
கொண்டே அவருடைய தலையில் அடித்து ட்ரக்கில் இழுத்துப்போட்டதை தான் கண்டதாக
பிரிட்டீஷ் ராணுவ வீரர் கூறுகிறார். மின்சார அதிர்ச்சி, தலைமுடியை கட்டிய
சித்திரவதையும் சிறைக்கைதிகளுக்கு வழக்கமான சித்திரவதைகளாக இருந்துள்ளன.
சிறைக் கைதிகளை பெரிய நாய் கூண்டுகளில் நீண்டகாலம் அடைத்திருந்ததாக நேரில்
கண்டவர்கள் கூறுகின்றனர்.
அடித்து உதைத்தல், குளிரில்
நிறுத்துதல், கொலைச்செய்வோம் என்று மிரட்டல், மன ரீதியாக தளர்வடையச்
செய்தல் போன்றவற்றால் ஈராக் கைதிகள் சித்திரவதைச் செய்யப்பட்டனர் என்று
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
ஈராக்கில்
அமெரிக்கா படையின் அன்றைய கமாண்டரான ஜெனரல் ஸ்டான்லி மக்கிறிஸ்டல் சிறையில்
எப்பொழுதும் இருப்பார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. பேரழிவு ஆயுதங்கள்
சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம்
தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படையினர் ஈராக்கை ஆக்கிரமித்தனர்.
ஆனால், ஒன்பது ஆண்டுகள் ஆக்கிரமிப்பிற்கு பிறகு பேரழிவு ஆயுதங்கள் எதுவும்
கண்டுபிடிக்கப்படவில்லை.
ஈராக் ஆக்கிரமிப்பின் 10 ஆண்டுகள்
நிறைவில் பி.பி.சி ஆய்வறிக்கையில் வெளியான தகவலில், அமெரிக்க-பிரிட்டன்
உளவுத்துறை ஏஜன்சிகள் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை என்று
திட்டவட்டமாக கூறியபிறகு அதனைப்புறக்கணித்துவிட்டு அமெரிக்காவும்,
பிரிட்டனும் ஈராக்கை ஆக்கிரமித்தனர் என்று கூறியது. அமெரிக்கா ஈராக்கில்
நடத்திய தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்த
குழந்தைகளும், ஆண்களும், பெண்களும் இன்றும் துயரத்தை அனுபவித்து
வருகின்றனர். ஈராக்கின் அடிப்படை கட்டமைப்பை தகர்ந்துவிட்டது.
0 கருத்துகள்: