நீண்டகாலமாக இழுபறிநிலையில் இருந்துவந்த பொத்துவில் கல்வி வலயத்திற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பொத்துவில் உப
கல்வி வலயத்தை கல்வியமைச்சு அங்கீகரித்திருந்த நிலையில், உடனடியாக இவ்வுப
கல்வி வலயத்திற்குரிய ஆளணிகளை இணைத்துக் கொள்ளவுமென அண்மையில் கிழக்கு
மாகாண கல்வியமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்தையின்போது முடிவாகியிருந்த
நிலையில், பொத்துவில் உப கல்வி வலயத்திற்குரிய முதலாவது கல்விப்
பணிப்பாளராக என்.அப்துல் வஹாப் (SLEAS)) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வலயத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் ஆளணி இவராவார். இவர் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில், இலங்கை கல்வி நிருவாக சேவைக்கான போட்டிப் பரீட்சையில் இவர் சித்தியடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு உதவிக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பொத்துவிலுக்கான உபகல்வி வலயத்திற்கான ஆளணியினரை இணைப்பதற்கான நடவடிக்கையின் ஓரங்கமாக மேற்படி கல்வி நிருவாக சேவையிலுள்ள என்.அப்துல். வஹாப் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் கடந்த 09.04.2013 அன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீண்டகாலமாக பேசப்பட்டுவரும் பொத்துவில் பிரதேச கல்விப்பிரச்சினைகளைத் தீர்க்கவும், அக்கரைப்பற்றிலிருந்து பிரிந்து தனியான கல்வி வலயம் ஒன்றை அடுத்தாண்டிலிருந்து உருவாக்கித்தருவதாகவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் திரு.விமலவீர திஸாநாயக்க அண்மையில் (08.04.2013) கிழக்கு மாகாண அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது உறுதிமொழியினை வழங்கியிருந்தார். இக்கலந்துரையாடல் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரான எம்.எஸ்.உதுமாலெவ்வையின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெற்றிருந்தது.
இவ்விசேட கலந்துரையாடலில் கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார, மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம், திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சுந்தரலிங்கம், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம், கல்வியமைச்சின் கணக்காளர் ரமேஸ், பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் வாசித், பொத்துவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ. அஸீஸ் மற்றும்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

0 கருத்துகள்: