பிரஸ் கவுன்சில் தலைவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா ?

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றி பிரஸ் கவுன்சில் தலைவரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் விமர்சனம் செய்ததற்காகப் பதவி விலக வேண்டும் என்று கூறும் அருண்ஜெட்லி, குஜராத் முதல்வர் மோடி ராஜதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அன்றைக்குப் பிரதமராக இருந்த நிலையில் வாஜ்பேயி சொன்னாரே, அதற்குப் பொருள் என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது, அதைவிட இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும். ஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்!

பரந்துபட்ட இந்தியத் துணைக் கண்டத்துக்கு இந்துத்துவா பொருந்துமா ?

பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன ?

என் மதம் - இந்துமதம்
என் மொழி - சமஸ்கிருதம்
என் கலாச்சாரம் - இந்து கலாச்சாரம்

என்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது ?

எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது ?

பிரஸ் கவுன்சில் தலைவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா ?

பொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்!

அதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்!

இப்படி யார் கூறுகிறார் ?

மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர், முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா ?

பிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா ?

அவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிவிடவில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால் இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் வாழுமா ?

வாஜ்பேயி மோடியின் ராஜ தர்மம் பற்றி சுட்டிக் காட்டவில்லையா ?

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்ற போதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது, அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும் ?

கட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அப்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லி ? வளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா ? மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா ? வாழ்வா ?

அதனால் தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது ?

சிறைச்சாலையில் கூட ஏ வகுப்பு உண்டு, வேளை தவறாமல் உணவு உண்டு, வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா ?

மோடி மீது கட்ஜு வைத்த குற்றச்சாட்டு மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts