இலங்கையில்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால்மா வகைகள் பலவற்றில் டிசிடி (DCD
அல்லது Dicyandiamide) என்ற ரசாயன பொருள் கலக்கப்படவில்லை என தாய்லாந்தில்
மேற்கொள்ளப்பட்ட இரசாயன பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா குறித்த தாய்லாந்தின் இரசாயன
பகுப்பாய்வு அறிக்கையில் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாக சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி
இரசாயனம் கலந்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த
சர்ச்சைகளின்போது, சுகாதார அமைச்சும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையும்
அது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தன.
இந்த பால்மா வகைகளில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் இல்லை என்று சுகாதார அமைச்சும் அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால் தற்போது மீண்டும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான தொழிநுட்ப
ஆய்வுத்துறை அமைச்சு, தனியான ஆய்வொன்றை நடத்தி, வெளிநாட்டு பால்மா வகைகளில்
டிசிடி கலந்திருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
´DCD என்பது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற அல்லது வைக்கோலுக்கு
பயன்படுத்துகின்ற ஒருவகை இரசாயனப் பொருள். நாங்கள் ஆய்வுக்குட்படுத்திய
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எல்லா பால்மா வகைகளிலும் இந்த DCD
இராசயனம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது´ என்று தொழிநுட்ப ஆய்வுத்துறை
அமைச்சின் ஊடகச் செயலாளர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்தார்.
இந்த
பால் மாவகைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்வதை அனுமதிப்பதா அல்லது
இலங்கையில் தடை செய்வதா என்ற தீர்மானத்தை நுகர்வோர் அதிகாரசபையும் சுகாதார
அமைச்சும் எடுத்தால் அதன்படி நாட்டின் சுங்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை
எடுக்க முடியும்´ என்று தனுஷ்க ராமநாயக்க கூறினார்.
இதேவேளை,
தாம் முன்னர் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, இறக்குமதியாகும் பால்மா
வகைளில் உடலுக்கு தீங்கேற்படுத்தும் எதுவும் இல்லையென்று சுகாதார அமைச்சின்
உணவு பாதுகாப்புக் குழு உறுதிசெய்திருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு
அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்ஷூக் கூறினார்.
´மார்ச் 17- ம்
திகதியிலிருந்து இதுபற்றி நாங்கள் ஆராய்ந்துவந்துள்ளோம். ஜனாதிபதி என்னிடம்
விடுத்திருந்த உத்தரவின்படி, பால்மா மாதிரிகளை நாங்கள் வெளிநாட்டில்
பரிசோதனை செய்திருந்தோம். இந்த பால்மா வகைகளில் உடலுக்குத் தீங்கு
ஏற்படுத்தும் எதுவும் இல்லை சுகாதார அமைச்சு அறிவித்தது´ என்றார் ரூமி
மர்ஷூக்.
இப்போது மீண்டும் இன்னொரு அரச நிறுவனம் பால்மா
வகைகளில்பிசிடி இருப்பதாகக் கூறியிருப்பதை பத்திரிகைச் செய்திகள் மூலமாகவே
தாம் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
மக்களின் உடலுக்கு
தீங்கு ஏற்படுத்தும் பொருள் பற்றி அறிவிக்க வேண்டியது சுகாதார அமைச்சு தான்
என்றும் இந்த புதிய ஆய்வு முடிவு பற்றி அடுத்துவரும் நாட்களில் சுகாதார
அமைச்சு எடுக்கும் தீர்மானத்தின்படியே தமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்
என்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சபைத் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமது பால்மா வகைகளில் டிசிடி இரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த
சர்ச்சைகளை அடுத்து நியுசிலாந்தின் பிரதான பால்மா ஏற்றுமதி நிறுவனமும்
அந்நாட்டு அரசும் ஆய்வுகளை மேற்கொண்டு, தமது பால் மா வகைகளில் உடலுக்கு
தீங்கேற்படுத்தும் பொருட்கள் இல்லை என்று கடந்த ஆண்டில் அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: