இலங்கையை
ஆட்சி செய்த கடைசிச் சிங்கள மன்னனாக கருதப்படும் ஸ்ரீ விக்கிரம
ராஜசிங்கனை கொலைவெறியுடன் ஆங்கிலேயப் படைகள் துரத்தி வருகின்றன.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்த மன்னன் மகியங்கனை நகரை
ஊடறுத்து அதற்கு அருகிலுள்ள சிறு கிராமமான பங்கரகமவுக்குள்
நுழைகின்றான். அங்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம்
பெண்ணொருவர் (பாத்திமா என அறியப்படுகின்றாள்) நெல்லை காயவைத்துக்
கொண்டிருந்தார். மன்னனின் நிலையைக் கண்டதும் அங்கிருந்த பொந்து போன்ற
அமைப்புள்ள பாரிய மரத்தின் மறைவில் ஒளிந்து கொள்ளுமாறு அப்பெண்
மன்னனுக்கு சாடை செய்கிறாள். மன்னனும் மறைந்து கொள்கிறான்.
ஆவேசத்துடன் அங்கு வந்த ஆங்கிலேயர்கள் மன்னனைப் பற்றி அவளிடம்
வினவுகின்றனர். அவளோ தெரியாதென கூறிவிடுகின்றாள். ஆத்திரம்
மேலிட்ட ஆங்கிலேயப் படைகள் அவளை அங்கேயே பலியெடுத்து விட்டு
சென்றுவிடுகின்றன.
வெளியில் வந்த மன்னன் உயிரிழந்து
கிடக்கும் பாத்திமாவை பார்த்து ‘மா ரெக லே’ (என்னைக் காத்த இரத்தமே)
என்ற வார்த்தையை பிதற்றியவனாக தேம்பித் தேம்பி அழுகின்றான். சிங்கள
பழங்கதைகளில் ‘உயிர்காத்த உத்தமி’ என வர்ணிக்கப்பட்ட இப் பெண்
செய்த தியாகத்திற்கு நன்றிக்கடனாக அந்த ஊரையே அப்பெண்ணின்
குடும்பத்திற்கு மன்னன் எழுதி வைத்ததாக வரலாறு கூறுகின்றது.
அதற்கான உயில் பத்திரம் 1956 வரை பதுளை கச்சேரியில் இருந்ததாக
வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இன்று என்ன
நடந்து கொண்டிருக்கின்றது. உயில் எழுதிக் கொடுக்கப்பட்ட பங்கரகம
பிரதேசத்திலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்ற
மஹியங்கனை நகரில் அமைந்துள்ள சிறிய பள்ளிவாசல் அல்லது தொழுகை
நடத்துமிடம் நாட்கணக்காக மூடிக் கிடக்கின்றது. எந்தச் ‘சாவியை’
கொண்டும் இதனை திறக்க முடியாமல் நாதியற்று நிற்கின்றது முஸ்லிம்
சமூகம்.
0 கருத்துகள்: