2013ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு தரப்பட்ட மேலும் ஒரு அதிர்ச்சியாக மஹியங்கன விவகாரம் அமைந்திருந்தது. ஒரு சிலருக்கு கோபமும் மேலும் சிலருக்கு கவலையும் இன்னும் பலருக்கு குழப்பமுமாக அமைந்த இவ்விவகாரம் தற்போது ஒரு முடிவை எட்டியுள்ளது.

எப்படி ?

வழக்கம் போலவே தாம் நினைத்ததை சாதித்துள்ளது இனவாதம் என்பதுதான் கவலைக்குரிய விடயம். இன்றைய நிலையை பொறுத்தவரை இவ்விடயத்தை தூக்கிப்பிடிப்பதிலோ அல்லது மேலதிக ஆய்வுகளை செய்வதிலோ எந்த வித பிரயோசனமும் இல்லை. ஏனெனில் மஹியங்கன விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என்பதே பிரதேசத்தில் தொழில் புரியும் வர்த்தகர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருக்கிறது.

இது தொடர்பாக சோனகர் வலைத்தளம் மேற்கொண்ட நேர்காணல்கள், விசாரணைகளின் போது பிரதேச வாதிகளும் ஏறத்தாழ இதே கருத்தையே கொண்டிருந்த போதும் இதன் பின்னணி பற்றி அறியும் தேவையை அரச ஊடகங்களில் வெளியான தகவல்கள் உணர்த்தி நின்றன.

பள்ளிவாசல் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறு தொடக்கம் அரச ஊடகங்களில் குறித்த கட்டிட உரிமையாளர் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் எனும் பெயரில் தகவலொன்று வெளியாகி, அதில் இக்கட்டிடமானது எனது வர்த்தக நிலையமே தவிர பள்ளிவாசலாக ஒரு போதும் பயன்படுத்தப்படவில்லை என அவரே குறிப்பிட்டதாகவும் இது தமது குடும்பத்தினரின் மத அனுஷ்டானங்களுக்காக பாவிக்கப்பட்டதேயன்றி பொது மக்கள் கூடி தொழுகை நடாத்திய பள்ளி வாசலாக ஒரு போதும் இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரச்சாரம்

எனினும் கட்டிட உரிமையாளரை மாத்திரமன்றி மஹியங்கன பிரதேச முஸ்லிம் வர்த்தகர்களின் நடவடிக்கைகளையும் நாம் நன்கு அறிந்துள்ளதால் குறித்த கடிதப்பிரச்சாரத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய விளைந்தோம்.

எனினும், இதன் உண்மையை மக்கள் முன் வைப்பதற்கு முன்பதாக கள யதார்த்தத்தையும் விளக்குவது தகும் என்பதால் இப்பிரதேசம் தொடர்பான ஒரு சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.

மஹியங்கன பிரதேசம் ஏறத்தாழ 99 % சிங்கள மக்களை கொண்ட (127,000 வாக்காளர்கள்) பிரதேசமாகும். எனினும் இப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் எதுவித இன வேறுபாடுகளும் இல்லாத நிலையிலேயே முஸ்லிம் வர்த்தக சமூகம் சிங்கள மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வந்திருக்கிறது.

இதன்போது வர்த்தகர் சீனி ஹாஜியாருடன் இருந்த நெருக்கமான உறவை பேணி வந்த அமைச்சர் விதானகேயின் தந்தையின் உந்துதலும் ஆதரவும் கூட மஹியங்கன முஸ்லிம் வர்த்தக சமூகம் நிம்மதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்குரிய சூழ்நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

அவரது பரிந்துரையின் பேரிலேயே குறித்த இடத்தில் வர்த்தகர்கள் மற்றும் பிரயாணிகள் ஒன்று கூடி தொழுகை நடத்தக்கூடிய இடம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியிலும் சீனி ஹாஜியார் உட்பட்ட நலன் விரும்பிகள் இறங்கியிருக்கின்றனர்.

ஆனாலும் இன்றைய அரசியல் சூழ்நிலை தலை கீழாக மாறி வருகிறது. குறிப்பாக பொது பல சேனா எனும் அமைப்பின் வளர்ச்சியும் அவர்களது இனவாத கருத்துக்களின் தீவிரமும், அவர்களுக்கு தீனி போட்டு சுதந்திரமாக வளர்த்து வரும் அரசின் நடவடிக்கைகளும் பெரும்பாலும் அடிமட்ட சிங்கள மக்களிடம் உறங்கிக்கொண்டிருக்கும் இனவாதத்தை வெகுவாக தூண்டி வருகிறது.

ஹலால் பிரச்சினையை வைத்து ஜம் இயதுல் உலமாவை பலிக்கடாவாக்கி வளர்ச்சி பெற்ற BBS நாளை மறுதினம் (ஆகஸ்ட் 02ம் திகதி) மஹியங்கனையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதனால் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கு ஏற்ப இனவாதம் மஹியங்கன நோக்கி வருவதை அடையாளப்படுத்த குறித்த பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளானதுடன் BBS க்கு தேவையான விளம்பரமும் பெறப்பட்டது.

அரசியல்

இந்நிலையில் என்னதான் முஸ்லிம் சமூகத்துடன் நல்லுறவை பேணி வந்தாலும் அரசியல் களத்தில் தன்னை ஆதரிக்கும், தனக்கு வாக்களிக்கும் பெரும்பான்மை சமூகத்தின் பால் தன பார்வையை திருப்பும் நிர்பந்தமும் தேவையும் கூட இவ்விடயத்தில் தலையிட்டு குறித்த பள்ளி வாசலை மூடச்செய்த அமைச்சர விதானகேவுக்கு இருப்பதை மஹியங்கன முஸ்லிம் வர்த்தக சமூகம் நன்கு உணர்ந்துள்ளதுடன் ஏற்றும் கொள்கிறது.

ஏனெனில் இங்கு வாழும் முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் வேறு தொகுதிகளில், அதாவது தமது சொந்த இடங்களில் (காத்தான்குடி, மடவள போன்ற பகுதிகள் )வாக்குரிமை பெற்றவர்களாவர். எனவே, அவர்கள் வாக்கு வங்கிகள் எந்த வகையிலும் அரசியல் செல்வாக்கற்றவையாகவே இருப்பதனால் அரசியலில் ஆளுமையற்ற நிலையில் குறித்த விவகாரத்தின் அரசியல் பின்னணியை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

பள்ளிவாசல் இருந்ததா இல்லையா ?

இன்றைய நிலையில் அரச சார்பு ஊடகங்களில் அப்படியொரு பள்ளிவாசல் இருக்கவே இல்லை என பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தாலும் அந்த இடத்தில் 1991ம் ஆண்டு முதல் ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தமை உண்மையாகும்.

ஜும்மா தொழுகையின் போது, பிரதேச வர்த்தகர்கள் மற்றும் பிரயாணிகள் உட்பட 150 க்கும் 250க்கும் இடைப்பட்டவர்கள் கூடுவதும், அதிலும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு வர்த்தக நிலையத்துக்கு இருவர் மாத்திரமே வாருங்கள் என நிர்வாக அழைப்பையும் மீறி மக்கள் திரள்வதால் குறிப்பிட்ட இடம் இனவாதிகளின் கண்ணையும் உறுத்திக்கொண்டே வந்திருக்கிறது.

சந்தர்ப்பம் பார்த்திருந்த இனவாதிகளே இப்போது BBS கக்கும் முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தமது இனவாத அழுத்தத்தை பிரயோகித்து இறுதியில் ஆதரவளித்து வந்த அதே அமைச்சரின் வாயால் “நீங்கள் தான் காரியத்தை கெடுத்து விட்டீர்கள் எனவே இந்த இடத்தில் இனி பள்ளிவாசலை மறந்து விடுங்கள்” என்று கூற வைத்திருக்கிறார்கள்.

மாற்றீடு என்ன ?

ஒரு மாற்றீடும் தற்போதைக்கு இல்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். எனவே மஹியங்கன முஸ்லிம் வர்த்தகர்கள் அருகில் இருக்கும் பங்கரமட கிராமத்துக்கே தொழுகைக்காக செல்ல வேண்டும்.

இதன் அசௌகரியங்கள் மற்றும் துன்பங்களுக்கு அப்பால் இங்கு கற்றுக்கொண்ட பாடமானது, நம்பிக்கையின் அடிப்படையிலேயே குறித்த இடம் இயங்கி வந்ததே தவிர முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதாகும்.

இது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இவ்வாறு இயங்கும் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் ஒரு பாடமாகும்.

இன்று இனவாதம் மேலோங்கி இருக்கும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மஹியங்கனையில் தொழில் புரிபவர்களை பொருத்தவரை அவர்களது உடமைகளை மற்றும் முதலீடுகளையும் காப்பற்றிக்கொளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே, இவ்விடயத்தினை மேலும் பெரிதாக்குவதை விட பொறுமையுடன் கைவிடுவதே அவர்களுக்கு இருக்கும் சிறந்த தெரிவாக இருப்பதாக நம்மிடம் பள்ளி நிர்வாகம் உட்பட வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடிதம் உண்மையா ?

இந்த பின்னணியில் கடந்த சில தினங்களாக அரச ஊடகங்களில் பிரச்சாரப்படுத்தப்படும் கடிதம் தொடர்பாக பார்க்கும் பொது, இக்கடிதம் எந்த வகையிலும் உண்மையற்ற ஒரு கடிதம் என்பதையும், அதில் முகவரியிடப்பட்டவருக்கே தெரியாமலே இக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் எம்மால் உறுதியாக கூற முடியும்.

ஒப்பமிட்டவர் புதன் கிழமையே ஊருக்கு சென்ற நிலையில் ஞாயிறு அவரது ஒப்பத்துடன் கடிதம் வெளியானது அவருக்குமே அதிர்ச்சியாக இருந்தாலும் ஏற்கனவே இதில் எதையும் செய்ய முடியாது எனும் தெளிவான நிலை இருப்பதால் இது தொடர்பாக மேலதிகமாக எதையும் பேசுவதைக் கூட மஹியங்கன முஸ்லிம் சமூகம் விரும்பவில்லை.

பொலிசும் முறைப்பாடும்

குறித்த சம்பவம் தொடர்பாக போலிஸ் என்ன செய்தது என்றும் போலிசில் முறைப்பாடு செய்யப்படவில்லையா என்றும் கூட அப்பாவி முஸ்லிம்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆம், முறைப்பாடு செய்யப்பட்டது, ஆனாலும் தாக்குதல் நடத்தியவர்களை தேடாத போலிஸ் முறைப்பாடு செய்தவர்களையே துருவி துருவி ஆராய்ந்து அவர்களது சுய விபரங்கள் சொத்து விபரங்களை சேர்த்திருக்கிறது என்பதையும் தெளிவாக கூற முடியும்.

முஸ்லிம் அமைச்சர்கள்

வழக்கம் போல திரை மறைவில் எமது அமைச்சர் பெருமான்கள் பேசியிருக்கின்றனர், கட்டிட உரிமையாளருடன் இது தொடர்பாக அளவலாவியிருக்கின்றனர் என்பது நமக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப்பெற்ற தகவல்.

அதவுல்லா எட்டியும் பார்க்க வில்லையாகினும் ஹிஸ்புல்லா, ரிஷாத் மற்றும் “நீதி” அமைச்சர் ஹகீம் இது தொடர்பாக திரை மறைவில் குசலம் விசாரித்திருக்கின்றனர். ஆனாலும் அது அத்தோடு முடிந்த கதை.

முடிவு

நமது வீட்டு வாசலை இனவாதம் தட்டினாலன்றி அடுத்த வீட்டு முஸ்லிமுக்கு கூட என்ன நடந்தாலும் பரவாயில்லை, இல்லை பாதிக்கப்பட்டவன் தான் சார்ந்த ஜமாத்துகாரனா, கொள்கை வாதியா, கட்சி காரனா, சாரம் கட்டுபவனா, கலிசான் போடுபவனா, படித்தவனா, பணமுள்ளவனா என்று எமது மேன்மை தங்கிய சமூகம் சிந்தித்து முடிவதற்குள் அடுத்த மஹியங்கன தயாராகிவிடும். எனவே, இது இத்தோடு முடிந்து போன கதையாகும்.

பஷன் பக் உரிமையாளர் ஒரே இரவில் எடுத்த முடிவுக்கு ஆகக்குறைந்தது பல நாள் போராட்டத்தின் பின் மஹியங்கன சமூகம் வந்திருக்கிறது. ஆனாலும் அவரை போல ஓடி ஒளியாமல் முகம் கொடுத்து நிற்கும் சமூகமாக இந்த பள்ளி நிர்வாகம் இருக்கிறது. ஆயினும், நமது சமூகம் வழக்கம் போல ஓடி ஒளிந்துவிட்டது.

நம்மிடம் இருக்கும் பலவீனங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக்கொண்டு வருகிறது என்பது எப்போது உணரப்படும் அடுத்தடுத்த பள்ளிவாசல் தாக்குதல்கள், மூடல்கள் எவ்வாறு தடுக்கப்படும் என்பதும் எப்போது இந்த சமூகம் விழித்துக்கொள்ளும் எவ்வாறு எதிர்காலத்தை எதிர்கொள்ளும் எனும் கேள்விகளும் தொக்கு நிற்கும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts