''இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''
''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே

காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.''

''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?''

''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும்போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''
''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''
''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது. நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச்செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது. தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தபோதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைதுசெய்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர்தான், தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.
தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம். இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''
''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''
''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது. ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பான்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்? நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலைசெய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.''

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts