பாகிஸ்தானின்
முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தங்கியுள்ள பண்ணை வீட்டை
தகர்க்க தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் அதிபராக இருந்தபோது தலிபான்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்ததால்,
அவரைக் கொல்ல நடந்த 3 தாக்குதலில் இருந்து முஷாரப் தப்பியது
குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா
மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகர் மத்திய சிறையில் திங்கள்கிழமை
நள்ளிரவு தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 250
தலிபான்கள் சிறையில் இருந்து தப்பிவிட்டனர்.
இந்தக்
தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த
நிலையில், முன்னாள் அதிபர் முஷாரபை குறிவைத்து அவர் தங்கியுள்ள சௌக் ஷாஸாத்
பண்ணை வீட்டை தெஹ்ரிக்-இ-தலிபான் மற்றும் சிபா-இ-ஷகாபா ஆகிய அமைப்புகள்
தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முஷாரப்பை,
சிறையில் அடைக்க நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ல் உத்தரவிட்டது. இதையடுத்து
அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர்
தங்கியிருக்கும் வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த தலிபான்கள்
திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த வருவோர் பாதுகாப்பு படையினர் போல்
மாறுவேடத்தில் வர வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு, முஷாரபை "சாத்தான்' என்று
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அதிபராக இருந்தபோது கடந்த
2007-ல் லால் மஸ்ஜித்தில் ராணுவ நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட
அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, முஷாரபை கொல்ல தலிபான்கள்
திட்டமிட்டு வருகின்றனர்.
சிறை தகர்ப்புக்கு ரூ.1 கோடி செலவு:
தேரா இஸ்மாயில்கான் நகர் மத்திய சிறையைத் தகர்க்க ஒரு மாதம்
திட்டமிட்டதாகவும், இதற்காக ரூ.1 கோடி செலவிட்டதாகவும் இந்தத்
தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பின்
கமாண்டர் அத்நன் ரஷீத் தெரிவித்துள்ளார்.
இந்தக் தாக்குதலுக்கு
மார்க்-இ-நிஷாத் என்று பெயரிட்டதாகவும், மீட்கப்பட்ட எங்களது நண்பர்கள்
(தலிபான்கள்) வடக்கு வஜிரிசிஸ்தான் பகுதியில் உள்ள மில்அலியில் பாதுகாப்பான
இடத்துக்கு சென்றுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தலிபான்களின் முக்கிய கமாண்டர்களான ஹாஜிஅப்துல் ஹக்கிம், ஹாஜி இலியாஸ்,
வாலித் அக்பர் ஆகியோர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,
சிறையில் இருந்து தப்பிய 252 கைதிகளில் 45 பேரை போலீஸார் புதன்கிழமை கைது
செய்துள்ளனர். மேலும், பலரைத் தேடிவருவதாகக் கூறப்படுகிறது.
0 கருத்துகள்: