புதுடெல்லி:குஜராத்
முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்து
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின்
தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு எழுதிய கட்டுரை தொடர்பாக காங்கிரஸ் –
பா.ஜ.கவினர் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
மோடியை விமர்சித்ததால் ரோஷம் கொண்ட பா.ஜ.க கட்ஜுவை ப்ரஸ் கவுன்சில்
பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு பதில்
அளித்து கட்ஜுவுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்
செயலாளர் திக்விஜய் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது:
குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள
அருண் ஜெட்லி, அந்த மாநில முதல்வர் மோடிக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறார்.
அதனால்தான் அவர் இந்த விஷயத்தில் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்.
ஜெட்லி இவ்வாறு கடுமையாகக் கண்டித்துப் பேசாவிட்டால், மீண்டும் மாநிலங்களவை
எதிர்க்கட்சித் தலைவராக முடியாது. மகாராஷ்டிரம், இமாசலப் பிரதேச
முதல்வர்களைக் கண்டித்தும்தான் கட்ஜு பேசினார். அப்போதெல்லாம் ஜெட்லி
கண்டனம் தெரிவிக்காதது ஏன்? இஃப்திகார் கிலானியை கைது செய்தபோது உள்துறை
அமைச்சகத்தைக் கூட கட்ஜு விமர்சித்தார். டெல்லி பாலியல் பலாத்கார
சம்பவத்தில் போலீசாரை கடுமையாக குற்றம்சாட்டினார். அப்போதெல்லாம் ஜெட்லி
ஒன்றுமே பேசாமல் இருந்து ஏன்? என்று திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அபிஷேக் மனு சிங்வி கூறியிருப்பது:மோடியை
விமர்சித்ததன் மூலம் கட்ஜு காங்கிரஸ் கட்சியில் இல்லாமலேயே அக்கட்சியின்
உண்மை விசுவாசியாக உள்ளார் என்று ஜேட்லி கருத்துக் கூறியுள்ளார்.
குஜராத் கலவரத்தை முன்வைத்து நாட்டில் உள்ள பல்வேறு பகுதி மக்களும்,
கட்சிகளும், சமூக அமைப்புகளும் நரேந்திர மோடியை குற்றம்சாட்டி வருகின்றன.
இதனால் அவர்கள் அனைவருமே காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடியுமா?
என்று காங்கிரஸ் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்
ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், மார்கண்டேய கட்ஜுவுக்கு
ஆதரவு தெரிவித்துள்ளார். குஜராத்திலும், பீகாரிலும் என்ன நடைபெறுகிறது
என்பதை உண்மையின் அடிப்படையில்தான் கட்ஜு பேசியுள்ளார் என்று பாஸ்வான்
கூறியுள்ளார்.
கட்ஜுவுக்கு பிரபல வழக்கறிஞர் ஃபாலி எஸ் நரிமான்
ஆதரவு தெரிவித்துள்ளார். ‘கட்ஜுவின் கட்டுரை மிகச்சிறந்தது.மனித உரிமைகளில்
நம்பிக்கை வைத்துள்ள எந்தவொரு நபரும் கூறும் காரியங்களைத் தான் அவர் தனது
கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்’ என்று நரிமான் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: