ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பான வாதவிவாதங்கள் பல்வேறு மட்டங்களில்
நடைபெற்று ஓரளவு ஓய்ந்திருக்கின்றன. இது சமூகத்தில் பல தாக்கங்களை
ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமாவை நோக்கி இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதனை நாம் அவதானிக்கலாம். அந்த வகையில்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்
தனது இணையதளத்திலே “பிறை விவகாரம்-தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்“
என்ற தலைப்பிலே ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். ஒவ்வொரு தனிமனிதனுக்கும்
இருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். தனது கருத்தை வெளியிட
அவர் பூரண சுதந்திரம் கொண்டவர் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் அவர் தனது கட்டுரையிலே “…அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
அமைப்புக்கு தலைமை வழங்க அறிவிலும் நிதானத்திலும் சமூக உறவிலும் பரந்த
மனப்பான்மையிலும் அரவணைப்பிலும் சிறப்பாக முன்னின்று உழைப்பதற்கு தகுதியான
ஒருவராக நான் கண்ணியமிக்க யூசுஃப் முஃப்தி அவர்களைக் காண்கின்றேன். அவர்
அப்பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என முன்மொழிகின்றேன்’ என என்னுடைய பெயரை
ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைப் பொறுப்புக்கு முன் மொழிந்திருக்கிறார். இந்த
முன்மொழிவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனை இங்கு நான்
தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இந்த மேற்கோள் இன்றைய (2013.08.15)
விடிவெள்ளி பத்திரிகையிலும் வெளியாகி இருக்கிறது. இது சமூகத்தில் பல தவறான
புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல்
உலமா 8 தசாப்தங்களுக்கும் மேலான பூர்வீகத்தைக் கொண்ட ஒரு அமைப்பு. இதற்கு
தகுதியும் திறமையும் வாய்ந்த பல உலமாக்கள் தலைமை வழங்கி
வந்திருக்கிறார்கள். அந்தவகையில் என்னுடைய ஆசானாகிய அஷ்ஷெய்க் ரிஸ்வி
முப்தி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாக இதன் தலைமைப் பொறுப்பை வகித்து
வருகிறார்.
மனிதர்கள் என்ற வகையில் அனைவரும் தவறுவிடக்
கூடியவர்கள்தாம். தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர தலைமையை மாற்றுவது
என்பது ஆரோக்கியமான முடிவல்ல. இத்தகைய ஒரு பொறுப்பு வாய்ந்த
தலைமைத்துவத்தை நான் கனவிலும் நினைக்கவில்லை. அதற்கான தகுதியும் ஆற்றலும்
கொண்டவனாகவும் நான் இல்லை என்பதனை இங்கு தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
எனவே மேற்படி செய்தி ஏற்படுத்தும் தவறான புரிதல்களுக்கு எந்தவகையிலும் நான் பொறுப்பாளி அல்ல என்பதனை இங்கு அறிவித்துக் கொள்கிறேன்.
0 கருத்துகள்: