பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக பள்ளிவாசல்களைத் தாக்கி முஸ்லிம்கள் மீது காடைத்தனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ள போதிலும் அராசங்கம் அவற்றைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்ற இச்சூழ்நிலையில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு சமூகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

"தம்புள்ளை பள்ளிவாசல் தொடக்கம் கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் வரை நாட்டில் நாற்பதுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்களும் மதரசாக்களும் தாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மஹியங்கனை பள்ளிவாசல் உட்பட பல பள்ளிவாசல்களும் மதரசாக்களும் பலாத்காரமாக மூடப்பட்டிருக்கின்றன.

இவை தவிர முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் இறைச்சிக் கடைகளும் நாளாந்தம் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் வருகின்றன. அத்துடன் ஹலால், ஹிஜாப் உள்ளிட்ட மார்க்க விடயங்களும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இலங்கை முஸ்லிம் மக்கள் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டு நிம்மதியிழந்து மிகவும் பீதியுடன் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த இரு வருடங்களாக இவ்வாறு பேரின வெறியாட்டம் முஸ்லிம் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் தவறி விட்டது.

முஸ்லிம்களினதும் பள்ளிவாசல்களினதும் பொருளாதார மையங்களினதும் பாதுகாப்பு தொடர்பில் முஸ்லிம் தலைவர்களினதும் அமைச்சர்களினதும் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் அரசாங்கத்தினால் செவி சாய்க்கப்படவில்லை என்றே மக்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இந்நாட்டு முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை அனுஷ்டித்துக் கொண்டிருந்த போது கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் பேரினவாதக் காடையர்களினால் தாக்கப்பட்டிருப்பதானது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை விட பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த பொலிசார் இத்தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்கின்ற செய்தி எமக்கு இன்னும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது.

தற்போது முஸ்லிம் இளைஞர்கள் பொறுமையின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூக உரிமைக்கான பேரியக்கத்தில் அரசியல் பயின்று பல்வேறு கட்சிகளில் இன்று அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் எம்.பி.க்களாகவும் பதவி வகிக்கின்ற முஸ்லிம் சகோதரர்கள் இப்பிரச்சினைகளை பொறுப்புடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும்.

இவர்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து கொண்டு முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை தடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒரு விடயம் என கருத வேண்டியுள்ளது.

முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவுடனேயே இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் முஸ்லிம் எம்.பி.க்களும் அமைச்சர்களும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் சமூக நோக்குடன் சிந்தித்து அரசுக்கான ஆதரவை விளக்கிக் கொள்வதுடன் முஸ்லிம் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தமது அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஒற்றுமையுடன் சமூக அரசியல் பணியை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் என முஸ்லிம் சமூகத்தின் பெயரால் அறைகூவல் விடுக்கின்றேன்.

இதன் மூலம் குறைந்தபட்சம் இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் குறித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதுடன் எமது நாட்டுக்கு தாராளமாக பொருளாதார உதவிகள் வழங்கி வருகின்ற அரபு, முஸ்லிம் நாடுகளின் அழுத்தங்களை பிரயோகிக்க செய்ய முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.

ஆகையினால் இக்கோரிக்கை தொடர்பில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் கட்சி பேதங்கள் மற்றும் தனிப்பட்ட நலங்களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து இதய சுத்தியுடன் சிந்தித்து - சாதகமாக பரிசீலித்து கூட்டாக தீர்மானம் எடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என்று மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(அத தெரண - நிருபர்)

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts