எமது வணக்கத் தலங்களுள் ஒன்றான கொழும்பு 14 கிராண்ட்பாஸில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது முன்னேற்பாட்டுடனும், நன்கு திட்டமிட்டும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களாகிய நாம் தெட்டத்தெளிவானதும் வெளிப்படையானதுமான எமது பலத்த கண்டனத்தை வெளிப்படுத்த விழைகின்றோம்.

ஜனாதிபதியின் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு மிக்க முஸ்லிம் அமைச்சர்கள் என்ற முறையில் புனித பள்ளிவாசலொன்றில் அமைதியான முறையில் தொழுவதற்கென ஒன்றுகூடியிருந்த அடியார்கள் கூட்டமொன்றை மனக்கிலேசம் அடையச் செய்யும் வகையில் மிருகத்தனமாகவும் கோழைத்தனமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துயர் மிகு வன்முறைச் செயற்பாடு குறித்து சுயாதீனமான விசாரணையொன்றை உடனடியாக நடத்துமாறு நாம் நாட்டின் அரச தலைவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தச் சம்பவமானது, நாட்டில் கடந்த பல மாதங்களாக சங்கிலித் தொடராக நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களின் சமீப கால நிகழ்வாகவே நோக்கப்படுகின்றது. முன்னைய சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் பள்ளிவாசல்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்டிருந்த தாக்குதல்கள் குறித்து சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியோரால்; எடுக்கப்பட்டிருந்த அரைமனதான, அக்கறையற்ற பலனளிக்காத நடவடிக்கைகள் நீண்ட கால யுத்தமொன்றின் முடிவில் இந்த நாட்டில் குழப்பங்களை உருவாக்குவதென கங்கணங்கட்டியுள்ள சில தீவிரவாதக் குழுக்களுக்கு தைரியமூட்டியுள்ளவையாகவே காணப்படுகின்றன.

தண்டனைப் பயமின்மை உணர்வுடன் செயற்படக்கூடிய சில சக்திகள் இருப்பதாக பொதுமக்கள் மனங்களில் ஆழ வேரூன்றியுள்ள அபிப்பிராயம் முற்றுமுழுதாக கலையப்பட வேண்டும்.

ஆகப்பிந்திய இந்தச் சம்பவமானது பல மணி நேரத்தின் பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பிய கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்தியில் உள்ள கிராண்ட்பாஸ் மாளிகாவத்தை மருதானை மற்றும் கெத்தாராமை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தினை நோக்கிய மதம் சார்ந்த குரோத மனப்பான்மையை வெளிப்படையாக ஆதரிக்கும் இந்தப் போக்கை தடுத்து நிறுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்குமாறு நாம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத்தை தோற்கடித்தமை மற்றும் யுத்தத்தை முடிவு கட்டியமை ஆகியவை அனைத்துப் பிரஜைகளினதும் சமாதான சகவாழ்வுக்கு வழி கோல வேண்டுமே தவிர, தனித்து ஒரு மக்கள் குழுவின் மேலாதிக்கத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமொன்றை அர்த்தப்படுத்தப்பட்டுவிடக் கூடாது.

அரசின் அமைச்சர்கள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறும் நாம் தங்களை வினயமாக வேண்டுகிறோம்.

மதங்களிடையே நல்லிணக்க செயற்பாட்டை உறுதிப்படுத்த வல்ல நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனம் சார்ந்த பொறிமுறையொன்றை உருவாக்குமாறு நாம் தங்களை வலியுறுத்துகிறோம். பல்லின மற்றும் பல சமயங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாட்டில் எமது சமய சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான கடமையொன்றை அரசாங்கம் கொண்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர் பின்பற்றியொழுகும் சமயமொன்றின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதென்பது இன்னுமொரு சமயத்தை மேம்படுத்தும் அல்லது பாதுகாக்கும் நடவடிக்கையாக எவ்வாறு அர்த்தப்படுத்த முடியுமென்பதை எம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

நாட்டில் பரவி வரும் வன்முறை கும்பல் மற்றும் அளவுக்கு மீறி ஆர்வங்காட்டும் பித்துப்பிடித்துப்போயுள்ள செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் என்ற வகையில் நாம் ஜனாதிபதியையும் மற்றும் சங்கைக்குரிய பௌத்த மதகுருமார்களையும் வேண்டிக்கொள்கின்றோம்.

கையொப்பம் இட்டுள்ளோர் :-

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா,உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா, சுற்றாடல் புதுப்பிக்கக்கூடிய சக்திவள பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.அப்துல்காதர் ஆகிய இருவரும் கொழும்பில் இருக்கவில்லை. ஆயினும் இதற்கு அவர்களது இணக்கம் பெறப்பட்டுள்ளது.

குறிப்பு:- ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பௌத்த மத தலைவர்களினதும், நாட்டில் வாழும் ஏனையோரினதும் கவனத்தை ஈர்ப்பதற்கான இவ்வறிக்கை சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் 1.30 மணிக்கு முஸ்லிம் அமைச்சர்களால் கைச்சாத்திடப்பட்டது. இவ்வறிக்கைக்கு உள்நாட்டு ஊடகங்களும், வெளிநாட்டு செய்தி சேவைகளும் உடனடியாகவே முக்கியத்துவம் அளித்தன.

முன்னாள் இராஜதந்திரிகளான ஜாவீத் யூசுப் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், முன்னாள் அமைச்சர் பதியுத்தீன் மஹ்முதீன் புதல்வர் தாரிக் மஹ்முத் மேல்மாகாண சபை உறுப்பினர்களான நௌஸர் பௌஸி, அர்ஷாத் நிசாமுதீன், முஹம்மத் பாயிஸ் ஆகியோரும் சிரேஷ்ட அமைச்சர் பௌஸியின் இல்லத்தில் சமூகமளித்திருந்தனர்.

இவ்வறிக்கையை வெளியிட்ட பின்னர் அமைச்சர்கள் பௌத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற அவ்வமைச்சின் செயலாளர், பிறசமய அமைச்சர்கள், பௌத்த மதகுருமார் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்றவதற்காக அங்கு சென்றனர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts