
சிறுவர்களுக்கான நீதி பற்றிய சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் பேசியதாவது...
டெல்லியில் சமீபத்தில் ஓடும் பஸ்சில் ஒரு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திகார் சிறையில் காவலில் இருந்த முக்கிய குற்றவாளி ராம்சிங் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மற்ற 5 பேர் மீதான விசாரணையில் சிறுவன் மீதான விசாரணை சிறார் நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள சிறுவனை முன்னிறுத்தித்தான் அதிகமாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்படியானால் அவன் தான் இதற்கெல்லாம் காரணமா? இந்த பலாத்கார சம்பவத்துக்கு அவன்தான் மூலகாரணம் என்பதை போலவும், அவனால்தான் இந்த பலாத்காரமும் கொலையும் நடந்தது என்பதை போலவும் பல்வேறு விதமான செய்திகள் நாட்டில் நாள்தோறும் வெளியாகி வருகிறது.
பலாத்கார சம்பவங்கள் நாட்டில் இதற்கு முன் நடக்கவே இல்லையா?
இப்போதுதான் பலாத்காரமும் அதைத் தொடர்ந்து கொலையும் நடந்துள்ளதா? இதற்கு முன்னர் இதேபோன்ற சம்பவங்கள் நடந்த போதெல்லாம் காட்டாத ஆர்வம் செய்தியாளர்களுக்கு இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் மட்டும் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
துரதிர்ஷ்டவசமாக எல்லா சம்பவங்களும் நடந்து விட்டன. அதற்கு சிறுவன் ஒருவனே காரணமானவன், அவன் மட்டுமே கொடூரமாக இந்த படுபாதக செயலை செய்தான் என்பதுபோல இட்டுக் கட்டி செய்தி வெளியிடுவதை நாளிதழ்களும் ஊடகங்களும் தவிர்க்க வேண்டும்.
இந்த வழக்கில் இன்னமும் விசாரணையே தொடங்கவில்லை. விசாரணை முடியட்டும். அப்போது எல்லா உண்மைகளும் வெளிவரும். அதுவரை அமைதிகாப்பதுதான் நல்லது.
அதுவரை பொறுமையாக காத்து இருப்போம். தவறு செய்யும் சிறுவர்களை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும். அவர்களை நாட்டின் சிறந்த, பயனுள்ள குடிமகனாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலமே சிறுவர்கள்தான். எனவே அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.
0 கருத்துகள்: