2006-
2008 காலப்பகுதியில் ஆழ்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக்
கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா முழுமையான உதவிகளை வழங்கியது என்று
பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“தி ஒஸ்ரேலியன்” நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க
முடிந்தது போரில் ஒரு திருப்பமாக அமைந்தது. 2006க்கும் 2008க்கும்
இடைப்பட்ட காலத்தில் நாம் இத்தகைய 12 மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை
அழித்திருந்தோம்.
அமெரிக்கர்கள் எமக்கு மிகமிக உதவியாக இருந்தனர்.
பெரும்பாலான இந்தக் கப்பல்களின் இருப்பிடம் குறித்து அமெரிக்கர்களே
எமக்குத் தகவல் தந்தனர். விடுதலைப் புலிகள் பெரும்பாலான ஆயுதங்களை
வெளிச்சந்தையில் வாங்கினார்கள்.
பல ஆட்டிலறிகள் வடகொரியாவில்
தயாரிக்கப்பட்டவை. அவர்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வைத்திருந்தனர்.
அவர்களிடம், சிறிலங்கா இராணுவத்திடம் இருந்தளவுக்கு சமமாக ஆட்டிலறிகளும்,
மோட்டார்களும் இருந்தன. சிறிலங்கா இராணுவத்தை விடவும் அதிகமாகவும் இருந்தன.
அவர்களின் ஆட்டிலறிகள் எமக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தின.
அமெரிக்க செய்மதி தொழில்நுட்பம், புலிகளின் ஆயுதக்கப்பல்கள் இருக்கும்
இடத்தை கண்டறிய, சிறிலங்கா கடற்படையால் அவற்றைத் தேடிச் சென்று தாக்க
முடிந்தது.
சிறிலங்கா பெரும்பாலான ஆயுதங்களை இஸ்ரேலில்
இருந்தும், பாகிஸ்தானிடம் இருந்துமே கொள்வனவு செய்தது” என்றும் அவர் மேலும்
கூறியுள்ளார்.
0 கருத்துகள்: