
இன்று ஆரம்பமான 24வது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவில் தன்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையடுத்து உரையாற்றிய பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதற்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சேம்பர்லைன் டோனஹே உரையாற்றும் போது, மனிதஉரிமைகள் விவகாரங்களை எதிர்கொள்வதற்கு, ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்தை வரவேற்றுப் பேசிய அவர், அவரால் சிறிலங்காவில் மனிதஉரிமைகள், நீதித்துறை, ஜனநாயக ஆட்சி குறித்த கவலைகள் தொடர்பாக ஆராய முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்தை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி கவலை வெளியிட்டார்.
அதேவேளை, ஜேர்மனி பிரதிநிதி உரையாற்றியபோது, நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது குறித்து தாம் திகைப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது சிறிலங்காவில் உள்ள மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் மட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஜேர்மனி பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இதைடுத்து உரையாற்றிய, ஒஸ்ரியப் பிரதிநிதி, நவநீதம்பிள்ளையின் பயணத்தை அடுத்து, உள்ளூர் மனிதஉரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்: