முஸ்லிம்கள் பயங்கரவாதிகளோ, பிரிவினை வாதிகளோ, அடிப்படை வாதிகளோ அல்ல என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்று தெரிவித்தார்.
சிலர் பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சினைகளை ஏற்படுத்த
முயற்சி செய்கின்றனர். முஸ்லிம்களை தவறான வழிக்கு இட்டுச்செல்ல ஐக்கிய
தேசியக் கட்சி முயன்றாலும், முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன்தான்
உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாக, உடைக்கப்படுவதாக கூறுகிறார்கள். அவை
அனைத்தும் வெறும் பிரசாரங்கள்தான் என்றும் அமைச்சர் பெளஸி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின்
செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற் கண்டவாறு
தெரிவித்தார்.
இஸ்லாம் என்பது சமாதானம் என்று பொருளாகும்.
முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புபவர்கள். 30 வருடகால யுத்தத்தை
முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைபெறச் செய்துள்ள ஜனாதிபதியின்
கரங்களை பலப்படுத்த இந்நாட்டு முஸ்லிம்கள் என்றென்றும் ஆயத்தமாக
இருக்கிறார்கள்.
கடந்த காலங்களிலும் ஆங்காங்கே குண்டு வெடிப்புகள்
இடம்பெற்றன. நான் மூன்று குண்டு வெடிப்புகளுக்கு முகம் கொடுத்து
தப்பியவன். எனக்கு பின்பக்கமாக வெடித்த குண்டு 10 பேரை பலிகொண்டது.
சற்று முன்னே குண்டுதாரி வந்திருந்தால் என்னுடன் 25 பேரளவில்
பலியாகியிருப்பார்கள். தெய்வாதீனமாக உயிர் தப்பினேன். இவ்வாறான ஒரு சூழலில்
தான் நாம் வாழ்ந்தோம். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நிம்மதியாக
ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
இதனை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். அவர்களுக்கு முஸ்லிம்கள் நன்றி கூற கடமைப்பட் டுள்ளனர்.
அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறிய ஒரு விடயத்தை
எல்லோரும் தவறாக புரிந்து கொண்டுவிட்டனர். அவர் கூறிய விடயத்தை முழுமையாக
படித்திருந்தால் புரிந்திருக்கும் என்றும் அமைச்சர் பெளஸி குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் கட்சி பேதம் பாராமல் நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
0 கருத்துகள்: