
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு செயலமர்வின் போது பாதுகாப்புச் செயலாளர் ஆற்றிய உரையின் போது தெரிவிக்கப்பட்டிருந்த முக்கிய கருத்துக்கள் சிலவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பின்வரும் அறிக்கையை விடுக்கின்றேன்.
தவறாக புரிந்து கொள்வதன் காரணமாக எழக்கூடிய சர்ச்சையையும், கருத்து முரண்பாட்டையும் தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்புச் செயலாளரின் உரையில் உள்ளடங்கியிருந்த வார்த்தைப் பிரயோகங்களையும் அதன் சந்தர்ப்ப நிலையையும் அதிலிருந்தவாறே எடுத்துக்கூற விழைகின்றேன்.
அவர் பின்வருமாறு கூறியிருந்தார்:
தீவிரவாத செயற்பாட்டை ஒத்தவகையில் இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் உலகளாவிய முஸ்லிம் சமூகத்தினருடனான ஐக்கியத்தை நிரூபிப்பதில் தங்களைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் இந்நாட்டில் வாழ்ந்து வரும் ஏனைய இனக்குழுமங்களுடனான தங்களின் ஒருமைப்பாட்டு உணர்வைக் குறைத்துக் கொள்வதனை சில வெளிநாட்டு சக்திகள் ஊக்குவித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம் அடிப்படைவாதமானது உலகம் முழுவதிலும் மற்றும் இந்தப் பிராந்தியத்திலும் பரவி வருகின்றமை உலகறிந்த உண்மையாகும். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகளுக்காக தகுந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் இலங்கையில் இடைத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நிலைவரம் குறித்து நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் சிரத்தை எடுத்துச் செயற்பட்டுவருகின்றனர். இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தீவிரவாதிகள் ஊக்கமளித்து விடலாமென்ற சாத்தியப்பாடே அவர்களின் இத்தகைய கரிசனைக்கு காரணமொன்றாக அமைகின்றது என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சமகால உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூற்றின் உள்ளடக்கத்தை இலகுவில் புரிந்து கொள்ளலாம். உண்மையில், இஸ்லாமிய உலகத்தில் காணப்பட்டுவரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை முஸ்லிம் அடிப்படை வாதமாக அல்லது இஸ்லாமிய தீவிரவாதமாக அநேகரால், பிரதானமாக, இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளால் நோக்கப்பட்டு வரும் நிலைமையே காணப்படுகின்றது.
அமெரிக்காவின் பரம எதிரியாக விளங்கும் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் விவகாரம் இதற்கு சிறந்தோர் எடுத்துக் காட்டாகும். அந்த நாடு இலங்கையுடன் அதிகளவிலான மனப்பூர்வமான நல்லுறவுகளைப் பேணிவருகின்றது. இதனையொத்தவகையிலேயே, இஸ்லாமியப் போராளிகளின் நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்கவென அரசு சார் நடவடிக்கைகளை சவூதி அரேபியாவும், பாகிஸ்தானும் மேற்கொண்டு வருகின்ற போதிலும், அத்தகைய நாடுகள் கூட நியாயமற்ற முறையில் எதிர்மறையான எண்ணப்பாடுகளுக்கு உட்பட்டவையாகவே அடிக்கடி நோக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், அவை ஜெனீவாவில் நடைபெற்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எமது நாட்டிற்கு ஆதரவளித்து, தொடர்ந்தும் எமது நட்பு நாடுகளாகவே இருந்து வருகின்றன.
முஸ்லிம் சமூகங்ககள் கடும்போக்குடைய குறுகிய மனப்பான்மை கொண்டுள்ள சக்திகளுடன் சில தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் என்பது அவரது கருத்தாகும். மேலும், நாட்டிற்குள் தீவிரவாதம் ஊடுருவி வளர்வதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கிக் கொடுக்கும் விளை நிலம் இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகம் என்ற அவரது பிரத்தியேகக் குறிப்பானது எம்மை மிகவும் மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது.
பண்டைய சிங்கள மன்னர்களின் காலம்தொட்டு இலங்கையின் வரலாற்று ரீதியான சிறுபான்மையினமொன்றாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகமானது, இலங்கைத் திரு நாட்டின் நலன்களை மேம்படுத்தும் அரசாங்கமொன்றைப் பார்ப்பதற்கும், தனித்த ஒரு குழுவின் மீதோ அல்லது வேறெந்த குழுவின் மீதோ கழுகுப் பார்வை செலுத்தப்படுவது தவிர்க்கப்படுவதையுமே ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றது.
எமது பன்மைத்துவ அரசியலை சார்ந்த அனைத்து சமூகங்களையும் பாதுகாப்பு செயலாளர் போன்ற அரச உயர் அதிகாரியொருவரின் அறிவுபூர்வமான வார்த்தைகள் உள்ளடக்கியிருந்தால் இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்கள் அனைவரும் நம்பிக்கையூட்டப்பட்டிருப்பர்.
பெரும்பான்மைச் சமூகத்திற்குள் கடும் போக்கு குழுக்கள் மேலேழுகின்றமைக்கான காரணம் சிறுபான்மை இனக்குழுக்கள் மத்தியில் குறுகிய மனப்பான்மை அதிகரிப்பதன் விளைவுகளில் ஒன்று என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருக்கும் கருத்துடனும் நான் பகிரங்கமாக முரண்படுகின்றேன்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்களின்
ஊடக ஆலோசகர்
0 கருத்துகள்: