சர்வதேச ரீதியில் அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்க சில பின்புல சக்திகளினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் கருத்து அமைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலமர்வின் போது இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் இருப்பது தொடர்பாக கவனம் செலுத்துவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய கருத்து வெளியிட்டிருந்தார். அதனை கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, அரசியல் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் எக்காலத்திலும் முஸ்லிம்கள் நாட்டுப்பற்று உடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது தெரியவரும். பிரிவினைவாதத்தை முஸ்லிம்கள் எதிர்த்து நின்றதன் காரணமாக பெறுமதிமிக்க பல உயிர்களையும் சொத்துக்களையும் இழந்ததோடு வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்பும் செய்யப்பட்டார்கள்.

சுதந்திரப் போராட்டத்திற்காக ஏனைய சமூகத் தலைவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத பங்களிப்பை அன்றைய முஸ்லிம் தலைவர்களும் செய்திருக்கின்றார்கள்.
இன்று திட்டமிட்டு முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதற்காகவே முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுகின்றன.

சமயப் பராம்பரியங்களையும் அவர்களது அடிப்படை நம்பிக்கையையும் நிந்தனை செய்யும் முயற்சியில் கடந்த ஒரு வருடமாக தீய சக்திகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் முஸ்லிம்கள் பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நாட்டு முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புகின்ற ஒரு சமூகம் என்பதை இப்பொறுமை பறைசாற்றுக்கின்றது.

எந்தவொரு நாட்டிலும் கொலைகாரர்கள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் விற்பனை என பல்வேறு சமூக சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் அனைத்து சமூகங்களிலும் உள்ளனர். அவர்களைக் கையாளுவதற்கென்று சட்டங்கள் உள்ளன.

ஆனால் இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிம் அல்லாதவர் குற்றம் இழைக்கின்ற பொழுது அது ஒரு தனிப்பட்ட நபரின் குற்றமாகவும் ஒரு முஸ்லிம் குற்றமிழைக்கின்றபோது அது முழு முஸ்லிம் சமூகமும் செய்த குற்றமாகவும் காட்ட முற்படுகின்ற ஒரு சூழல் நிலவுகிறது.

அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கும் மத்தியிலும் ஒரு முஸ்லிம் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அடையாளம் காட்டப்பட்ட அல்லது அவ்வாறான செயல்களுக்காக கைது செய்யப்பட்ட ஒரு சம்பவம் கூட இன்று வரை இடம்பெறவில்லை.

இந்நிலையில் பாதுகாப்புச் செயலாளரின் குறித்த கூற்று தொடர்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் கவலையடைவதோடு அக்கூற்றை முழுமையாக நிராகரிக்கின்றார்கள்.

குறிப்பாக இன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகள் திடீர் வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற நிலையில் அவற்றிற்கு எதிரான அடிமட்ட விசாரணைகளை செய்வதற்கு பதிலாக இவ்வாறான கூற்று பாதுகாப்புச் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டிருப்பதையிட்டு முஸ்லிம்கள் விசனமடைந்துள்ளார்கள்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சி என்ற வகையில் அரசு சர்வதேச ரீதியில் சந்தித்த இக்கட்டான நிலமைகளிலெல்லாம் அரசுக்கு தோள் கொடுத்திருக்கின்றது.

ஆகவே பாதுகாப்புச் செயலாளரின் மேற்படி கூற்றுக்கான காரணத்தை தெளிவுப்படுத்தி அதன் மூலம் முஸ்லிம்கள் தொடர்பாக தங்களது கூற்று தோற்றுவித்திருக்கின்ற பிழையான எண்ணக்கருவை நீக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts