புலிப்
பயங்கரவாதிகளுக்கு அன்று நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று இன, மத,
அரசியல், பிரதேச வாதங்களை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பி நாட்டை சீர்குலைக்க
முயற்சித்து வருகின்றனர். எனவே இவர்களின் வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள்
ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களை வேண்டியுள்ளார்.
மத்திய மாகாண சபைக்கு ஐ. ம. சு. மு. சார்பாக கண்டி மாவட்டத்தில்
போட்டியிடும் ரிஸ்வி பாரூக், எம். ஆர். எம். ஹம்ஜாட், எம். மர்ஜான்
ஆகியோர்களை ஆதரித்து 08-09-2013 கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில்
இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது ஜனாதிபதி
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்று வடக்கிலும் கிழக்கிலும்
வாழ்ந்த முஸ்லிம் மக்களை எட்டு மணி நேரத்துக்குள் விரட்டி அனுப்பிய புலிப்
பயங்கரவாதச் செயல்களினால் முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளுடன் தான்
அணிந்துள்ள ஆடைகளுடன் மட்டும் அகதிகளாக வெளியேறினர். இவ்வாறான அகதிகளுக்காக
அன்று எவருமே குரல் எழுப்பவில்லை. அவர்களுக்கு யாரும் ஒரு துண்டு
பாணையாவது வழங்கினார்களா? ஆனால் இன்று பலரும் அவர்களைப் பற்றி முதலைக்
கண்ணீர் வடிக்கும் போது எமக்கு அது பெரும் ஆச்சரியத்தை தருகின்றது.
நாம் தற்போது பள்ளிகளை உடைக்கவில்லை. உடைத்த பள்ளிகளை கட்டிக் கொடுப்பதும்
மேலும் புதிய பள்ளிவாசல்களை நிர்மாணித்துக் கொடுத்தும் வருகின்றோம். நாம்
சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் மிக நீண்ட காலமாக வாழ்ந்து
வருகின்றோம். தொடர்ந்தும் வாழ்வோம். மன்னர்கள் ஆட்சி காலங்களில் முஸ்லிம்
மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து காணி, பூமிகள் எல்லாம் வழங்கி
அவர்களோடு சகோதரத்துவத்துடன் வாழ்ந்தனர். அதுபோன்று நாம் இன்று வாழ்ந்து
வருகின்றோம். தொடர்ந்தும் வாழ்வோம். இவ்வாறான நிலையை சீர்குலைக்க சில இன மத
வாத குழுக்கள் அரசியல் ரீதியாக திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.
ஆகவே இந்த அரசாங்கத்தில் இன மத பேதங்கள் கிடையாது, சிறுபன்மை மக்களுடன்
அன்பாக வாழ்கின்றோம். அதுபோன்று இவர்களை பாதுகாப்பதும் எமது தார்மீக
பொறுப்பாகும். முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகின்றவர்கள் ஆனால் நான் ஒரு
உண்மையான பெளத்தன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வணங்குகின்றவன்.
இந்த
வகையில் நான் எனது மதத்தை நேசிப்பது போன்றே ஏனைய மதங்களையும்
நேசிக்கின்றேன். மேலும் உண்மையான பெளத்தர்கள் ஏனைய மதங்களையும் இனங்களையும்
மதித்து செயற்படுவார்கள்.
பயங்கரவாதத்தை ஒழித்து நம்
நாட்டுக்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் வழங்குவேன்? என
உறுதுயளித்ததைப் போலவே அதை நிறைவேற்றியுள்ளேன். நான் சொல்வதை செய்பவன்
செய்வதை சொல்லுபவன்.
இக் கூட்டத்தில் பெரும் திரளான முஸ்லிம்
மக்கள் மற்றும் அமைச்சர்களான ஏ. எச். எம். பெளசி, ஏ. ஆர். எம். ஏ.காதர்,
பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உள்ளிட்ட பல முக்கிய
பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்: