தம்புள்ளை
புனித பூமி அபிவிருத்தித்திட்ட வேலைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால்
துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென பள்ளிவாசலையும் உள்வாங்கி புதிய
வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள
எல்லைகளின் படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான கழிப்பறை தவிர்ந்த ஏனைய பகுதிகள்
பாதை அபிவிருத்திக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை ஹைரியா பள்ளி
வாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் விடிவௌ்ளிக்குத்
தெரிவித்தார்.
பள்ளிவாசல்
நிர்வாக சபை இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. முஸ்லிம்
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல்
உலமா சபை, மாத்தளை நகர மேயர் ஹில்மி கரீம் என்போருக்கு முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் அமைப்பின்
தலைவரும், பிரதியமைச்சருமான பைசர் முஸ்தபா இன்று வியாழக்கிழமை தம்புள்ளை
பள்ளிவாசலுக்கு விஜயம் செய்ய உறுதியளித்துள்ளதாகவும் சலீம்தீன்
தெரிவித்தார்.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு
முஸ்லிம் அமைச்சர்களுக்கும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை
பிரதிநிதிகளுக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபையினால் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக நிர்வாக
சபையினால் ஜனாதிபதிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் மற்றும்
முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஏற்கனவே பல கடிதங்கள் அனுப்பியும் அவற்றுக்கு
எதுவித பதிலும் கிடைக்கவில்லையெனவும் நிர்வாக சபை கவலை தெரிவித்துள்ளது.
மாத்தளை நகர மேயர் நாளை வியாழக்கிழமை நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர்
மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து நிலைமைகளை அறிந்து ஜனாதிபதி
மூலம் சுமுகமான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
0 கருத்துகள்: