
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை
மத்திய பகுதியில் கடந்த 40 வருடங்களாக வசித்துவரும் தமிழ்க் குடும்பங்களை
ஒரு வார காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு கண்டிப்பான உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு
படையினர் கொடுத்துவந்த அழுத்தங்களையடுத்தே காட்டுத் திணைக்கள அதிகாரிகள்
ஒருவார காலத்துக்குள் இம்மக்களை வெளியேறுமாறு அறிவித்திருக்கின்றார்கள்.
முள்ளியவளை மத்திய பகுதியிலுள்ள தமிழ்க்
குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கும் அங்கு ஐந்து ஏக்கர் நிலத்தில்
இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக
இந்தப் பகுதியில் காலாதிகாலமாக வசித்துவரும் தமிழ்க் குடும்பங்களை
வெளியேறுமாறு அதிகாரிகளும், படையினரும் தொடர்ச்சியாக அழுத்தம்
கொடுத்துவருவது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை
இந்தக் கிராமத்துக்கு வந்த காட்டுத் திணைக்கள அதிகாரிகள் ஒருவார
காலத்துக்குள் தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என
அறிவித்தல் பலகை ஒன்றை வைத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுடன் இணைந்து செயற்படும் வடபகுதித்
தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதிகளும் இந்தக் கிராமத்துக்கு நேற்று
முன்தினம் சென்று மக்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர். பி.பி.சி.க்கு இது
தொடர்பான செய்திகளைக் கொடுத்தது யார் எனக் கேட்டே அவர்கள்
எச்சரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது தமிழ்க்கட்சிப்
பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில்
கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்தே காட்டுத் திணைக்கள
அதிகாரிகள் முள்ளியவளை மத்திய கிராமத்துக்கு நேரில் வந்து குறிப்பிட்ட
கிராமவாசிகள் வசிப்பது காட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணி எனவும்,
அதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் எச்சரித்தனர்.
அதனையடுத்தே இது தொடர்பாக அறிவித்தல் பலகை ஒன்று அங்கு நாட்டப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் காடுகளை
வெட்டி குடியிருப்புக்களை அமைத்த இந்தக் கிராம மக்கள் இறுதிக்கட்டப்
போரின் போது அனைத்தையும் இழந்து மெனிக்பாம் முகாமில்
தஞ்சமடைந்திருந்தார்கள். பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில்
விடுவிக்கப்பட்ட இவர்கள், வீடுகளை அமைப்பதற்கோ வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கோ
வசதியில்லாத நிலையில் தமது உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களிலேயே
தங்கியிருந்தனர்.
தற்போது தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச
வசதிகளுடன் சிறிய சிறிய கொட்டில்களை அமைத்து அங்கு குடியிருக்க மக்கள்
முற்பட்டுள்ள நிலையில்தான், இராணுவத்தினர் அங்கு முகாம் அமைப்பதற்கு 5
ஏக்கர் காணி வேண்டும் எனக் கேட்டு வற்புறுத்தத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இப்பகுதி மக்கள் தமக்குரிய குடில்களை
அமைப்பதற்குத் தேவையான கிடுகுகளையும் தடிகளையும் பெற்றுக்கொள்வதற்குக்கூட
முடியாதவர்களாக உள்ளனர்.
அரசாங்கத்தினால் இவர்களுடைய
மீள்குடியேற்றத்துக்காக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை. போரின் போது
அனைத்தையும் இழந்த இவர்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தில் கூட உதவி
வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 40 வருட காலமாக வசித்துவரும் தமது
இருப்பிடங்களைவிட்டு வெளியேற முடியாது என்று அம்மக்கள்
கூறியிருக்கின்றார்கள்.
0 கருத்துகள்: