
எந்தவொரு குழுவிற்கும் சட்டத்தை கையில்
எடுக்க அனுமதியளிக்க முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ்
குணவர்தன தெரிவித்துள்ளார்.
மதத்தை பாதுகாக்கும் போர்வையில் நாட்டின்
எந்தவொரு நிறுவனமோ அல்லது அமைப்போ சட்டத்தை கையில் எடுக்க இடமளிக்கப்பட
மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சட்டம் அனைத்துத் தரப்பினருக்கும் சமமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவையின் துணைக்குழுவொன்று ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அண்மையில் காலியில்
திறந்து வைக்கப்பட்ட பொதுபலசேனாவின் அலுவலகத் திறப்பு விழாவில் பாதுகாப்பு
அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஸ
கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் குரோதத்திற்கு,
குரோதத்தினால், தீர்வு காண முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதாகவும்
சில சேனா அமைப்புகள் வாள், பொல்லுகளுடன் குரோதத்துடன் போரிடும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தென் மாகாண சபையின் உறுப்பினர் பத்தேகம
சமித தேரர் தெரிவித்துள்ளார்.
அனைத்து செயற்பாடுகளுக்கும் பதில்
செயற்பாடுகள் இருப்பதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை
ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பௌத்த தர்மத்திற்காக செயற்படுவதாக கூறும்
சில அமைப்புகள் புத்த பகவானையும் மீறி செயற்பட்டு வருகின்றன. இந்த
அமைப்புகளால் பௌத்த மதம் ஒருபோதும் பாதுக்காப்படாது. அதனை எதிர்பார்க்கவும்
முடியாது. மத மற்றும் இன வன்செயல்கள் ஏற்பட்டால், அரசாங்கம் மேலும்
பாதிப்பை எதிர்நோக்கும்.
பௌத்த அமைப்புகள் இடையிலும் மோதல்கள்
காணப்படுகின்றன. இந்த மோதல்களில் இறுதியில் அரசாங்கமே காயமடையும் எனவும்
சமித தேரர் கூறியுள்ளார்.
இதேவேளை ஹலால் பிரச்சினையில் கைவைத்த
பொதுபல சேனா எதிர்காலத்தில், முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்
நிலையங்கள் மீது கைவைக்கும் எனவும் பல முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
முகவர் நிலையங்கள் இலங்கையில் செயற்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பின்
பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்
நிலையங்கள், இலங்கை பெண்களை வெளிநாட்டு அனுப்பி வைக்கும், வேலைத்திட்டங்களை
முன்னெடுத்து வருகின்றன.
ஹலால் இலச்சினை நீக்கப்பட்டது மாத்திரம்
அது தொடர்பான முறைகளும் முற்றாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர்,
அடுத்த கட்ட நடவடிக்கைகள் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன
எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான ஒரு சூழலில் அரசாங்கம் முஸ்லிம்
மக்களை கொழும்பில் இருந்து விரட்டியடிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தி
வருவதாகவும் இது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ், சிங்கள
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வீடுகளில் இருந்து
வெளியேறும், உடன்படிக்கைகளில் கையெழுத்திட வேண்டாம் என மக்களுக்கு ஆலோசனை
வழங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், வீடுகளில் இருந்து வெளியேறுமாறு நகர
அபிவிருத்தி அதிகாரச் சபையின் தலைவர்கள் அறிவித்தால், அவர்களில் பெயர்
விபரங்களை வழங்குமாறும் கூறியுள்ளார்.
ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கிற்கான
வாகன தரிப்பிடத்தை நிர்மாணிப்பதற்காக மாளிகாவத்தை எபல்தோட்டம் பிரதேசத்தை
சேர்ந்த ஆயிரக்கணக்க குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம்
திட்டமிடப்பட்டுள்ளது எனவும் ரணில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்: